பணி நேரத்தில் மதுபோதை: இந்திய விமான நிலையங்களின் அவலம்!


2021 ஜனவரி முதல் 2022 மார்ச் வரை, இந்தியாவின் 42 விமான நிலையங்களில் மொத்தம் 84 பேர் பணி நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம். ஆல்கஹால் சோதனையில் மது அருந்தியது உறுதிசெய்யப்பட்டிருப்பவர்களில் 64 சதவீதம் பேர் விமான நிலைய வாகன ஓட்டுநர்கள் என்றும் மற்றவர்கள் ஏரோபிரிட்ஜ் ஆபரேட்டர்கள், சுமைதூக்குபவர்கள், வயர்மேன்கள் உள்ளிட்டோர் என்றும் தெரியவந்திருக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் விமான நிலைய நிர்வாக அதிகாரிகளால் பணியமர்த்தப்பட்டவர்கள். மற்றவர்கள், கேட்டரிங் நிறுவனங்கள், விமானப் பராமரிப்பு நிறுவனங்கள் என பிற நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டவர்கள்.

இவர்களில் 56 பேர் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் 35 விமான நிலையங்களில் பணியாற்றுபவர்கள். இதில் அகர்தாலா, அவுரங்காபாத், உதய்ப்பூர், புணே போன்ற நகரங்களுடன் தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்களும் அடக்கம். 17 பேர் அதானி குழுமம் நிர்வகிக்கும் 4 விமான நிலையங்களில் பணியாற்றுபவர்கள், 9 பேர் ஜிஎம்ஆர் குழுமம் நிர்வகிக்கும் 2 விமான நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.

நடைமுறையில் இருக்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதானி குழுமம், ஜிஎம்ஆர் குழுமம் ஆகியவை இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

x