‘குட்பை காங்கிரஸ்!’ - ‘மன் கி பாத்’ நேரலையில் கட்சியிலிருந்து விலகிய சுனில் ஜாக்கர்


சுனில் ஜாக்கர்

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் இந்து சமூகத் தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட சுனில் ஜாக்கர், இன்று அதிரடியாகக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் கட்சியைவிட்டே விலக முடிவெடுத்த சுனில் ஜாக்கர், இன்று ஃபேஸ்புக் நேரலையில் ‘மன் கி பாத்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது கட்சியிலிருந்து விலகும் முடிவை அறிவித்த அவர், “காங்கிரஸுக்கு குட்பை மற்றும் குட்லக்!” என்று உணர்ச்சி மேலிடத் தெரிவித்தார்.

யார் இந்த சுனில் ஜாக்கர்?

மூன்று முறை எம்எல்ஏ-வாகவும் ஒருமுறை எம்.பி-யாகவும் இருந்தவர் சுனில் ஜாக்கர். பஞ்சாப் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது சுனில் ஜாக்கர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனப் பேச்சு எழுந்தது. முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் காட்டிய காங்கிரஸ் தலைமை சரண்ஜீத் சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இது சுனில் ஜாக்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

கட்சி நடவடிக்கை

சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக இருந்தபோதே, அவர் காங்கிரஸுக்குப் பாரமாக இருக்கிறார் என விமர்சித்தவர் சுனில் ஜாக்கர். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சரண்ஜீத் சிங் சன்னியைப் பற்றிப் பேசும்போது, பட்டியலினச் சமூகத்தினர் குறித்து அவதூறாகப் பேசியதாக சுனில் ஜாக்கர் மீது புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அவருக்குக் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்பட்டார். முன்னதாக அவரை இரண்டு வருடங்களுக்குக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. பின்னர், அந்த முடிவு கைவிடப்பட்டது.

தன் மீதான நடவடிக்கையால்தான் மனமுடைந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். தனது ட்விட்டர் பக்கத்தின் சுயவிவரக் குறிப்பிலிருந்து கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அவர் நீக்கியிருந்தார். தனது ட்விட்டர் கணக்கின் பேக்ரவுண்ட் இமேஜாக காங்கிரஸ் கட்சிக் கொடிக்குப் பதிலாக மூவர்ணக் கொடியை வைத்தார்.

முன்வைத்திருக்கும் விமர்சனங்கள்

“இந்து மதத்தைச் சேர்ந்த சுனில் ஜாக்கர் பஞ்சாப் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என எழுந்த பேச்சுகள் அந்தத் தேர்தலில் கட்சியின் பின்னடைவுக்குக் காரணமாகிவிட்டன” என காங்கிரஸ் எம்.பி அம்பிகா சோனி கூறியிருந்ததை அவர் கண்டித்திருக்கிறார்.

ராகுல் காந்தி நல்ல மனிதர்தான் என்றும், அவர் மீண்டும் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கூறியிருக்கும் சுனில் ஜாக்கர், அண்டிப் பிழைக்கும் கும்பலிடமிருந்து அவர் விலகியிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ‘சிந்தன் ஷிவிர்’ எனும் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்திவரும் நிலையில், அந்தக் கூட்டமே ஒரு கேலிக்கூத்து என்றும் விமர்சித்திருக்கிறார்.

சுனில் ஜாக்கர் பதவி விலகியிருப்பது குறித்து ட்வீட் செய்திருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சித்து, ‘சுனில் ஜாக்கரைக் காங்கிரஸ் இழக்கக் கூடாது. அவர் தங்கத்தைப் போல ஒரு சொத்தாக இருப்பவர். கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

x