‘கோதுமை ஏற்றுமதிக்குத் தடை... விவசாயிகளுக்கு எதிரானது’ - விளாசித் தள்ளிய ப.சிதம்பரம்!


கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை என விமர்சித்திருக்கிறார்.

கோதுமை விளைச்சலில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் காரணமாக உள்நாட்டில் அதன் விலை உயரும் சூழல் உருவாகியிருக்கிறது. இதையடுத்து, கோதுமை ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ‘சிந்தன் ஷிவிர்’ எனும் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்திவருகிறது. இதன் இரண்டாவது நாளான இன்று இந்தியப் பொருளாதாரம் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதுமான கோதுமையைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு தவறியதால்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது எனக் கருதுகிறேன். கோதுமை உற்பத்தி குறைந்துவிட்டது எனச் சொல்ல முடியாது. ஏறத்தாழ அதே நிலைதான் தொடர்கிறது. சொல்லப்போனால், கோதுமை விளைச்சல் சற்றே அதிகரித்திருக்கிறது” என்றார்.

97 லட்சம் டன் நெல்லை சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு கொள்முதல் செய்திருப்பதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய ப.சிதம்பரம், அதுபோல் கோதுமைக் கொள்முதல் நடந்திருந்தால் ஏற்றுமதியைத் தடைசெய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்வது என்பது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. இதன் மூலம் ஏற்றுமதியில் கிடைக்கும் அதிக விலையின் பலன்கள் விவசாயிகளைச் சென்றடையாத நிலை ஏற்படும். இதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனெனில், இந்த அரசு ஒருபோதும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னடைவு

உக்ரைன் போர் கருங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்கள் செல்வது பெருமளவு தடைபட்டிருக்கிறது. கருங்கடல் பகுதி வழியாகத்தான் உலகின் கோதுமை வர்த்தகத்தில் கால் பங்கு நடைபெற்றுவருகிறது. இதனால், ஏற்பட்டிருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.

கோதுமையை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடான எகிப்து, சமீபகாலமாக கோதுமை இறக்குமதியில் தங்களுக்கு இந்தியாதான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது எனக் கூறியிருந்தது. 2021-22-ல், 7.2 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்த இந்தியா, இந்த ஆண்டில் இதுவரை 15 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்திருக்கிறது. இதையடுத்து, கோதுமை ஏற்றுமதியில் நிரந்தர நாடாக இந்திய உருவெடுக்கும் என உணவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் வெப்ப அலைகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் பெருமளவிலான கோதுமை வயல்கள் வெய்யிலில் வாடிக் கருகின. இந்த ஆண்டின் மார்ச் மாதம்தான், இந்தியா எதிர்கொண்ட கடும் வெப்பம் கொண்ட மார்ச் மாதம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கோதுமைப் பற்றாக்குறை உள்நாட்டிலேயே சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, கோதுமை ஏற்றுமதியைக் குறைத்துக்கொள்ளும் சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டிருப்பதாக ‘ப்ளூம்பெர்க் நியூஸ்’ ஊடகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x