‘உடலில் ஒரு துளியேனும் ராஜ்புத் ரத்தம் இருந்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள்!’


தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது என ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியும் பாஜக எம்.பி-யுமான தியா குமாரி கூறியிருந்த நிலையில், அதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு முகலாய மன்னர் ஷாஜஹானின் வழித்தோன்றல் ஒருவர் சவால் விட்டிருக்கிறார்.

தாஜ்மஹால் குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் அதன் 22 அறைகள் குறித்த ஊகங்கள் அவற்றில் முக்கியமானவை. அந்த வகையில் சமீபத்தில் பாஜகவின் இளைஞர் ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், அந்த அறைகளில் இந்துக் கடவுளர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை உறுதிசெய்ய அவற்றைத் திறக்குமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிடுமாறும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

ரஜ்னீஷ் சிங்கின் புகாருக்கு ஆதரவாக புதன்கிழமை (மே 11) செய்தியாளர்களிடம் பேசிய தியா குமாரி, “தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார். அத்துடன், தாஜ்மஹால் கட்டப்பட்டது தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில்தான் என்றும் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும், தேவையென்றால் அவற்றைக் காட்டத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். நிலத்தை ஷாஜஹான் பறித்துக்கொண்டதாகவும், அந்தக் காலகட்டத்தில் நீதிமன்றங்கள் இல்லை என்பதால் தங்கள் முன்னோரால் மேல் முறையீடு செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், ஷாஜஹானின் வழித்தோன்றல் எனத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் இளவரசர் யாகூப் ஹசீபுதீன், அதற்கு பதிலடியாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ஷாஜஹானின் இரண்டாவது மனைவி லால் பாய், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அக்பரின் மனைவியும் ஷாஜஹானின் பாட்டியுமான ஜோதா பாயும் ஒரு ராஜ்புத் என்றும் யாகூப் கூறியிருக்கிறார். அத்துடன், தனது 27 பாட்டிகளில் 14 பேர் ராஜ்புத் சமூகத்தினர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முகலாயர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், தங்கள் மருமகன்களுக்கு அவர்கள் நிலங்களையும் அன்பளிப்பாக வழங்கியதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்துடன், “உங்களிடம் அதற்கான ஆவணங்கள் இருந்தால், அவற்றைக் காட்டுங்கள். உங்களிடம் ராஜ்புத் ரத்தத்தில் ஒரு துளியேனும் இருந்தால் ஆதாரத்தைக் காட்டுங்கள்” என்றும் தியா குமாரிக்குப் பகிரங்கமாகச் சவால் விட்டிருக்கிறார்.

முன்னதாக தியா குமாரியின் குற்றச்சாட்டை வரலாற்றாசிரியர்களும் மறுத்திருந்தனர். மேலும், தாஜ்மஹாலின் 22 அறைகளைத் திறந்துகாட்ட தொல்லியல் துறைக்கு உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.

தியா குமாரி சர்ச்சைகளுக்குப் பேர் போனவர். தனது குடும்பம் கடவுள் ராமரின் வழிவந்தது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் குறிப்பிட்டார். அயோத்தி ராமர் கோயில் குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாகப் பேசியிருந்த அவர், “எனது தந்தை ராமரின் 309-வது வழித்தோன்றல். ராமனின் மகன் குசனின் வழித்தோன்றல்கள் என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x