'எனக்கு பசிக்கிறது, காசு இருந்தால் கொடுங்கள்'- சிறுவனை துடிக்கத் துடிக்க கொன்ற காவலர்


சாப்பிட காசு கேட்ட சிறுவனை கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார் காவலர் ஒருவர். இந்த அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ரவி சர்மா. சில நாட்களுக்கு முன்பு தாட்டியா மாவட்டத்திற்கு இவர் சென்றுள்ளார். அப்போது, பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 6 வயது சிறுவன், காவலரிடம் வந்து, 'எனக்கு பசிக்கிறது, காசு இருந்தால் கொடுங்கள்' என்று கேட்டுள்ளார். ஆனால், அந்த காவலர் தன்னிடம் காசு இல்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் சிறுவன் தொடர்ந்து அவரிடம் சாப்பிட காசு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவலர் ரவி சர்மா, சிறுவனை சரமாரியாக தாக்கியதோடு, கழுத்தை நெரித்துள்ளார். இதில் சிறுவன் துடிக்கத் துடிக்க மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சிறுவன் உடலை அருகே இருந்த புதர்ச்செடிக்குள் வீசி விட்டு சென்றுள்ளார். அப்பகுதிமக்கள் சிறுவனின் உடலை கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவனை ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், சிறுவனை கொன்றது காவலர் ரவி சர்மா என தெரிந்தது. இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாப்பிட காசு கேட்ட சிறுவனை காவலரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x