பிஹார் காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் 4 பேர் கைது


பாட்னா: காவலர் பணி ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிஹார் மாநில காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் காவலர் பணி ஆட்சேர்ப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அன்று தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி மத்திய காவலர் தேர்வு வாரியம் (சிஎஸ்பிசி) அந்தத் தேர்வை ரத்து செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸைச் சேர்ந்த கவுசிக் குமார் கார், சஞ்சய் தாஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த சுமன் பிஸ்வாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சவுரப் பந்தோபாத்யாய் ஆகிய 4 பேர் பிஹார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இம்மாதம் 5ம் தேதி, சஞ்சீவ் முகியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என கூறப்படும் அஷ்வானி ரஞ்சன், விக்கி குமார், அனிகேத் ஆகியோரை பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பிஹார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி), ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வு (டிஆர்இ) - 3 ஆகிய தேர்வுகளின் வினாத்தாள் கசிவு வழக்குகள் தொடர்பாக சஞ்சீவ் முகியா கும்பலைச் சேர்ந்த பலர் ஏற்கெனவே பிஹார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு வினாத்தாள் கசிவு சம்பவங்களில் பிஹாரில் இதுவரை பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150-க்கும் மேற்பட்டவர்களை அம்மாநில காவல் துறை கைது செய்துள்ளது.