இரவில் நொறுங்கிய ஹெலிகாப்டர்: பறிபோன கேப்டன்களின் உயிர்கள்


ராய்பூர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமான கேப்டன்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சியில் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது ஓடுபாதையில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி சேதமடைந்தது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் மாநில அரசின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த விமானிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

x