‘மைக்’குகளை ஆஃப் செய்து எதிர்க்கட்சிகளின் குரல் முடக்கம்: காங். குற்றச்சாட்டும் சபாநாயகர் பதிலும்


புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ‘மைக்’குகளை ஆஃப் செய்து எதிர்க்கட்சிகளின் குரல்களை முடக்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் நீட் விவகாரத்தை எழுப்பியபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாகவும் சாடியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி இன்னும் மவுனம் காத்துவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இளைஞர்களின் நலன்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். என்றாலும் இதுபோன்ற தீவிரமான விஷயங்கள் குறித்து பேசும்போது நாடாளுமன்றத்தில் மைக்குகளை ஆஃப் செய்து இளைஞர்களின் குரல்களை ஒடுக்கும் சதி நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

இத்துடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், தனது மைக்-ஐ ஆன் செய்யுமாறு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுக்கிறார். மேலும், நீட் விகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அரசினை வலியுறுத்துகிறார். அதற்கு பதில் அளித்த மக்களவைச் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எம்.பி.க்களின் மைக்ரோ போன்களை இயக்கும் ஸ்விட்ச் தன்னிடம் இல்லை என்றும், அப்படியான கட்டுப்பாடு வசதி இல்லை என்றும் விளக்கம் அளிக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "விவாதம் குடியரசுத் தலைவர் உரை மீதே இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அவையில் பதிவு செய்யப்படாது" என்றார்.

அதேபோல், மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்வுத் தாள் கசிவினால் மாணவர்கள் படும் துன்பம் குறித்த கவலையினை எழுப்பியபோது, அவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, 2023-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு எம்.பி.,யாக இருந்த ராகுல் காந்தி மக்களவையில் தனது மைக்-ஐ ஆஃப் செய்து ஆளும் கட்சி வேண்டுமென்றே அணைத்து தனது குரலை முடக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல், அப்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக இருந்த ஆதிர் ரஞ்சன் சவுதரி, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மூன்று நாட்கள் தனது மைக் முடக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.