டெல்லி விமான நிலைய விபத்து முதல் கல்வி விருது விழாவில் விஜய் பேச்சு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் இந்த விபத்துச் நடந்துள்ளது.

> விமானநிலைய விபத்து குறித்து பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் சாடல்: டெல்லி விமானநிலையத்தில் கனமழை காரணமாக டெர்மினல் 1 பகுதியில் மேற்கூரை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த விபத்து குறித்து பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முழுமையடையாத முனையத்தை அவசரமாக பிரதமர் மோடி திறந்து வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதிக பணிகள் வந்துபோகும் வகையில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட டெர்மினல் 1-ஐ பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் திறந்து வைத்தார்.

இதனிடையே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் அளித்துள்ளார். அவர், நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரதமர் மோடி திறந்து வைத்த முனையம் கட்டிடத்தின் மறுபக்கம் உள்ளது. தற்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான கட்டிடம் பழைய ஒன்று, அது கடந்த 2009ம் ஆண்டு திறக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

> நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு: நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் திங்கள்கிழமை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இன்று காலையில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் தொடங்கியதும் நீட் தேர்வு மற்றும் பிற தேர்வுகளின் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

> டெல்லியில் 24 மணி நேரத்தில் 228.1 மி.மீ. மழை பதிவு: தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 228.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.. ஜூன் மாதத்தில் டெல்லியில் பெய்த மழையில் இதுவே மிக அதிமானதாகும். இரவு 2.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரையிலான மூன்று மணி நேரத்தில் மட்டும் 150 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இக்கனமழை காரணமாக தலைநகரின் பல பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் தலைநகரம் ஸ்தம்பித்துள்ளது.

> நிலமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்: நிலமோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சோரனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பினை உயர் நீதிமன்றம் ஜூன் 13ம் தேதி ஒத்தி வைத்திருந்தது. இதுகுறித்து சோரனின் வழக்கறிஞர் அருனாப் சவுத்ரி கூறுகையில், "ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முதல்பார்வையில் இந்த குற்றத்தில் அவர் குற்றவாளி இல்லை என்றும், ஜாமீனில் இருக்கும் போது அவர் குற்றத்தில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் கூறியது" என்றார்.

> நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: “மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

> “தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை” - விஜய்: “தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக சரியாக 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

> இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதன் மூலம் சனிக்கிழமை அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது இந்தியா.

> புதிய உச்சத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஒரு புதிய உச்சத்துடன் தொடக்கின. வர்த்தகத்தின் துவக்கத்தில் சென்செக்ஸ் 214.40 புள்ளிகள் உயர்ந்து 79,457,58 ஆக இருந்தது. அதேபோல் நிஃப்டி, 41.40 புள்ளிகள் உயர்ந்து 24,085.90 ஆக இருந்தது.

> பைடன் vs ட்ரம்ப் காரசார விவாதம்: வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. வெள்ளை மாளிகையில் மீண்டும் அதிபர் அரியணையை அலங்கரிக்க ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் வெள்ளிக்கிழமை இருவரும் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். இதுதான் அதிபர் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு நடைபெறும் முதல் விவாத நிகழ்வு. இதனை சிஎன்என் ஊடக நிறுவனம் ஒருங்கிணைத்தது. இதில் இருவரும் காரசாரமாக பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினர். அதே நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், தனிப்பட்ட ரீதியாகவும் தாக்கி பேசினர்.