மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 21-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்குத் தள்ளிவைக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், நீட் தொடர்பான வழக்குகளில் திமுக சார்பில் வாதிடும் வழக்கறிஞருமான பி.வில்சன். மாணவர்களிடமிருந்து வந்திருக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக இன்று எழுதியிருக்கும் கடிதத்தில், ‘கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் முன்னணி நாயகர்களாகச் செயலாற்றினர். சமூகத்துக்கு உதவுவதற்காகத் தங்கள் உடல்நலன், குடும்ப நலன், எல்லாவற்றையும் விட தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்திருக்கின்றனர். எனவே, மருத்துவ மாணவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்போது நாம் குறைந்தபட்சம் அதற்குச் செவிசாய்க்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்’ என வில்சன் குறிப்பிட்டிருக்கிறார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத ஒதுக்கீடும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், அதற்கு எதிராக மாணவர்கள் சிலரும் சில அமைப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான வரையறையாக 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சூழலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடிதத்தில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கும் வில்சன், இந்த வழக்குகளில் தான் ஆஜரானதையும் குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பான ரிட் மனுக்கள் மார்ச் மாதம் விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மார்ச் 28-ல் விசாரணைக்கு வரும் எனப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், அந்த ரிட் மனுக்கள் மே 19-ம் தேதிக்கு விசாரணைக்கு வரவிருக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால் 2021 மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டதாகத் தனது கடிதத்தில் வில்சன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘2022 மார்ச் 24-ல்தான் இறுதி ஒதுக்கீடு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதிச் சுற்று நடத்தப்பட்டு ரத்துசெய்யப்பட்டது. பின்னர் ஏப்ரல் 7-ல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 146 முதுநிலை மாணவர்களுக்கு ஒரு சிறப்புச் சுற்று நடத்தப்பட்டது. பூர்த்தி செய்யப்படாத இடங்களுக்கான மறுகலந்தாய்வு இறுதிப் பட்டியல் மே 2-ல் வெளியிடப்பட்ட நிலையில், அது குறித்த தகவல்கள் மே 3-ல் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டன. 2021 மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் தேர்வாகி சிறப்புச் சுற்றின் மூலம் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றவர்கள் மே 7-ம் தேதி அந்தந்த மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கும் வில்சன், 2022 மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 4-ம் தேதி வரைக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டதையும், 21-ம் தேதி தேர்வுத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2021 மருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை மே 3-ம் தேதிதான் முடிவடைந்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், மிகக் குறைவான கால அவகாசம் இருப்பதால் மே 21-ல் நடக்கவிருக்கும் தேர்வை எதிர்கொள்வதை மாணவர்கள் சிரமமாக உணர்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 2021 மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றியடைந்தவர்களில், தங்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான சீட் கிடைக்குமா என 2022 மே மாதம் வரை காத்திருக்க நேரிட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், அடுத்த தேர்வுக்குத் தயாராக மிகக் குறைவான கால அவகாசம் மட்டுமே இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் கூறியிருக்கிறார்.
பெருந்தொற்றுக் காலம் என்பதால், இறுதி நேரத்தில் தேர்வுக்காக நெடுந்தொலைவு பயணிக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் இருப்பதாக வில்சன் கூறியிருக்கிறார். கேரளம், பிஹார், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் தேர்வுக்குத் தயாராவது கடினம் என்றும் தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதுபோன்ற காரணங்களை முன்வைத்து, மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க அரசிடம் வலியுறுத்துமாறு ஏராளமான மாணவர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறியிருக்கும் வில்சன், அதன் அடிப்படையில் 6 முதல் 8 வாரங்களுக்கு அந்தத் தேர்வை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.