ஓசூர் சர்வேதச விமான நிலைய அறிவிப்பு முதல் ஆப்கனை பதம் பார்த்த ‘பிட்ச்’ வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை: 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதன்கிழமை மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து வியாழக்கிழமை இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

அப்போது, “ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

> குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெற்ற ‘எமர்ஜென்சி’: எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், குடியரசுத் தலைவர் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஆனால், அத்தகைய சக்திகளுக்கு எதிராக நாடு வெற்றி கண்டது. இந்திய அரசியலமைப்பை வெறும் நிர்வாக ஊடகமாக மாற்ற முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தை, பொது உணர்வின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதனடிப்படையில், நவம்பர் 26-ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக இந்த அரசு கொண்டாடத் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 370-வது சட்டப்பிரிவு காரணமாக நிலைமை வேறுபட்டது.” என்று தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி.கள், குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

> ஓசூரில் சர்வேத விமான நிலையம்: பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு: திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து அவர் சட்டசபையில் அவர் பேசும்போது, “தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப் போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப் போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோல், காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

> “ஆகச் சிறந்த நகைச்சுவை” - அண்ணாமலை கருத்து: “ரூ.30 கோடி செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக முதல்வர் ஸ்டாலின் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கவுள்ளதாக கூறுகிறார். இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச் சிறந்த நகைச்சுவை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

> கோவை கிரிக்கெட் ஸ்டேடியம்: அமைச்சர் உதயநிதி அப்டேட்: தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அறிவிப்புகளை துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதில், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.2 லட்சம் நிதி ரூ.4 லட்சமாக உயத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், “சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் அளித்துள்ளார். முதல்வரின் அறிவுரைப்படி, அந்த மைதானத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரங்கள் முன்பு, நாம் கோவை சென்றபோது தொடங்கியுள்ளோம். இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

> இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

நிறைவாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும்போது, எங்களை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டு, அதன்பிறகு முதல்வர் பதில் அளிக்கிறார். ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயமா?

எதிர்க்கட்சிகளைப் பேசவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கு பதில் அளிப்பதே ஒரு நல்ல அரசாங்கத்துக்கு அடையாளம். ஆனால், திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில், சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதியே கிடையாது. மானியக் கோரிக்கையின் போது, பத்து நிமிடங்கள் மட்டும எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கப்படும். அந்த பத்து நிமிடத்தில் என்ன பேச முடியும்?” என்று கொந்தளிப்புடன் பேசினார்.

> அதிமுக போராட்டத்துக்கு பிரேமலதா, சீமான் ஆதரவு: முன்னதாக, திமுக அரசை கண்டித்து அதிமுக நடந்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதனிடையே, “மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவளிக்கிறது,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் .

> கள்ளச் சாராய விவகாரம்: எவிடன்ஸ் கதிர் குற்றச்சாட்டு: “காவல் துறை ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச் சாராயம் விற்பனை நடக்க வாய்ப்பில்லை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்,” என்று எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் வலியுறுத்தியுள்ளார்.

> ஃபாக்ஸ்கான் இந்தியா விளக்கம்: ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்த செய்திகளின் பின்னணியில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் கேட்டிருந்தது.

இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. “நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30% மட்டுமே ஆண்கள். நிறுவனத்தில் வேலை கிடைக்காத சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்கலாம்” என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

> ஆப்கன் அணியை பதம் பார்த்த பிட்ச்!: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து, 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கிரீன் டாப் பிட்ச் அனுபவமற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு, அப்படிப்பட்ட ஒரு பவுலிங் பிட்சைப் போட்டு ஐசிசி, அந்த அணியைக் காலி செய்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ரிக்கி பான்டிங் தனது வர்ணனையின்போது, “அரையிறுதிப் போட்டியை புத்தம் புதிய பிட்ச்சில் நடத்துவது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது. பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. இப்படிப்பட்ட பிட்ச்சையா போடுவது? ஒன்றரை வாரத்தில் இதனை தயார் செய்துள்ளனர். பந்துகள் ஸ்விங் ஆனப் போட்டிகளைப் பார்த்தோம். அது பிரச்சினையில்லை. கையாள முடியும். ஆனால், இங்கு பவுன்ஸ் முன்னுக்குப் பின் தாறுமாறாக உள்ளது. எழும்புதலும் தாழ்தலுமாக இருந்தது” என்று சாடியதும் குறிப்பிடத்தக்கது.

x