ரூ.1.5 கோடி நிலத்தை இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்!


தங்களுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி நிலத்தை தந்தையின் ஆசையை நிறைவேற்ற இஸ்லாமியர்களின் ஈத்கா கமிட்டிக்கு இரண்டு இந்து சகோதரிகள் வழங்கியுள்ள சம்பவம் உத்தராகண்ட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தம்நகர் சிங் மாவட்டம் காசிபூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. விவசாயியான இவர் 2003-ம் ஆண்டு காலமானார். இவருக்கு சரோஜ் மற்றும் அனிதா என்ற இரு மகள்களும், ராகேஷ் என்ற மகனும் உள்ளனர். சரோஜ் டெல்லியிலும், அனிதா மீரட்டிலும் வசித்து வருகின்றனர்.

தனது நிலத்தின் ஒரு பகுதியை இஸ்லாமியர்கள் வழிபாடு செய்யும் இடமான ஈத்காவிற்கு வழங்க வேண்டும் என்ற விருப்பம் ரஸ்தோகிக்கு இருந்துள்ளது. ஆனால், அவர் 2003-ம் ஆண்டு மறைந்த நிலையில், இந்த விஷயம் அவரது பிள்ளைகளுக்கு தெரியவில்லை. தந்தை வழங்க விருப்பப்பட்ட அந்த இடம் அவரின் இரண்டு மகள்களுக்கும் சொத்தாக சென்றுள்ளது.

இந்நிலையில், உறவினரிடம் பேசிக் கொண்டிருந்த போது ரஸ்தோகியின் இறுதி விருப்பம் குறித்து அவரது மகள்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகள்கள் இருவரும் தங்கள் சொந்த ஊரான காசிபூருக்கு வந்தனர். தங்கள் முடிவை சகோதரரான ராகேஷிடம் தெரிவித்தனர். அவரும் தன் சகோதரிகளின் முடிவை வரவேற்றார். பின்னர் சகோதரிகள் இருவரும், அங்குள்ள ஈத்கா கமிட்டியிடம் சென்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவர்களின் ஈகை குணத்தை அறிந்த ஈத்கா கமிட்டியினர் மகிழ்ந்து போனார்கள்.

இதுகுறித்து ஈத்கா கமிட்டியினர் கூறுகையில், "இரு சகோதரிகளும் மத நல்லிணக்கத்திற்கு வாழும் உதாரணம். இவர்களின் சிறந்த உள்ளத்திற்கு நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம். இரு சகோதரிகளுக்கும் விரைவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றனர். இதையடுத்து சுமார் 1.5 கோடி மதிப்பிலான இடத்தை இரு சகோதரிகளும் இஸ்லாமியர்களின் வழிபாடு செய்யும் இடத்திற்கு தானமாக வழங்கினர்.

"தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவது எங்கள் கடமை. இரு சகோதரிகளின் இந்த செயலால் எங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்" என அவர்களது சகோதரர் ராகேஷ் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மத மோதல்கள் வலுத்து வரும் நிலையில் இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்தும் வகையில் உத்தராகண்டில் நடந்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

x