‘பல்கலைக்கழக வளாகம் அரசியல் தளம் அல்ல... ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது!’


உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்பல்கலைக்கழகத்தின் தாகூர் அரங்கில் மே 7-ல் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுடன் ராகுல் காந்தி நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்த நிகழ்ச்சிக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று தங்கள் மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ராகுல் காந்தியுடன் மாணவர்கள் நேருக்கு நேர் உரையாடுவதாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், கல்விப்புலம் சார்ந்த செயல்பாடுகள் இல்லை. இந்நிகழ்ச்சியை அரசியல் கண்ணோட்டம் இல்லாதது எனக் கருத முடியாது. பல்கலைக்கழக வளாகத்தை அரசியல் தளமாகப் பயன்படுத்த முடியாது’ என தெலங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் 159-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6-வது தீர்மானத்தின்படி அங்கு அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் தெலங்கானா உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 14-வது சட்டக்கூறு ஆக்கபூர்வமான சமநிலைக்குத்தான் உத்தரவாதம் அளித்திருக்கிறது, எதிர்மறையான சமநிலைக்கு அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

x