“எமர்ஜென்சி பற்றி குறிப்பிட்டதை தவிர்த்திருக்கலாம்” - சபாநாயகரை சந்தித்த ராகுல் காந்தி கருத்து


ராகுல் காந்தி, ஓம் பிர்லா

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எமர்ஜென்சி குறித்து குறிப்பட்டது பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், அது தெளிவான அரசியல் என்றும், அதனைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, சபாநாயகருடனான அவரது முதல் சந்திப்பு இது. இச்சந்திப்பின் போது சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸின் (சரத் பவார்) சுப்ரியா சுலே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் அதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. சபாநாயகர், ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் மற்ற தலைவர்களுடன் சென்று சபாநாயகரைச் சந்தித்தார்" என்றார்.

தொடந்து, அவையில் எமர்ஜென்சி விவகாரம் எழுப்பப்பட்டது குறித்து ராகுல் விவாதித்தாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த வேணுகோபால், "நாடாளுமன்ற நடைமுறை குறித்து நாங்கள் பல்வேறு விஷயங்களைப் விவாதித்தோம். நிச்சயமாக இந்த விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அதுகுறித்து சபாநாயகரிடம் தெரிவித்தார். எமர்ஜென்சி குறித்து சபாநாயகர் குறிப்பிட்டதை தவிர்த்திருக்கலாம். அது தெளிவான அரசியல் குறிப்பு, அது தவிர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்" என்று கூறினார்.

இரண்டாவது முறையாக மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட அவசநிலை பிரகடனத்தைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை வாசித்தார். ஓம் பிர்லா தனது தீர்மானத்தில், “1975-ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட முடிவை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஜூன் 25, 1975 இந்திய வரலாற்றில் எப்போதும் ஒரு கருப்பு அத்தியாயமாக அறியப்படும். இந்த நாளில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தினார்.

இந்தியாவில் ஜனநாயக விழுமியங்களும் விவாதங்களும் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன. ஜனநாயக விழுமியங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுகின்றன. அவை எப்போதும் ஊக்குவிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்தியாவில் சர்வாதிகாரத்தை திணித்தார் இந்திரா காந்தி. அதன் காரணமாக, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது.எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தேசமும் அப்போது சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போதைய சர்வாதிகார அரசாங்கம் ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. நீதித்துறையின் தன்னாட்சி மீதும் கட்டுப்பாடு இருந்தது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.