தடுப்பூசி கட்டாயமல்ல... யாரையும் வற்புறுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி


கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தடுப்பாற்றல் தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜேக்கப் புலியெல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. கரோனா தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வு முடிவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் ஜேக்கப் புலியெல் கோரியிருந்தார். தற்போது செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா, செயல்திறன் கொண்டவையா எனப் போதுமான அளவில் சோதனைக்குட்படுத்தப்படவில்லை என்றும், அது குறித்த தரவுகளைப் பொதுவெளியில் வெளியிடாமலேயே அவசரகாலப் பயன்பாடு எனும் அடிப்படையில் அவற்றுக்கு உரிமம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஒரு சலுகையை அல்லது சேவையைப் பெற தடுப்பூசி கட்டாயம் என நிபந்தனை விதிப்பது குடிமக்களின் உரிமையை மீறுவது ஆகும்; எனவே, இந்த அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மாநில அரசு ஊழியர்களுக்குத் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படுவது, பொதுப் போக்குவரத்து, மானிய விலையில் உணவு தானியங்கள் பெறுவது போன்றவற்றுக்குக் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது என கரோனா தடுப்பூசி தொடர்பாக அமலில் இருக்கும் விஷயங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தேச நலனுக்கு எதிரானது என நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இதுபோன்ற மனுக்கள் தடுப்பூசி குறித்த தயக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் என்றும் சுட்டிக்காட்டியது. தடுப்பூசி சோதனை முடிவுகள் ஏற்கெனவே பொதுவெளியில் வெளியிடப்பட்டுவிட்டதாக சீரம், பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்களும் கூறின. தடுப்பூசி கட்டாயம் எனும் நிலைப்பாடு சரியானதே எனத் தமிழகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் வாதிட்டன. ஒவ்வொருவரையும் பாதுகாக்க தடுப்பூசி அவசியம்; குறிப்பாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களைக் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியம் என அம்மாநிலங்கள் விளக்கமளித்தன.

இந்நிலையில் இந்த வழக்கு எல்.என்.ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்தின் கீழ் உடல் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுகிறது என்றும் தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொது இடங்களுக்குச் செல்பவர்கள், சேவைகளையும் அரசு அளிக்கும் வளங்களையும் பயன்படுத்திக்கொள்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என உத்தரவிட வேண்டாம்; அப்படி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தால் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தகவல்களை, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து பெற்று பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். குறிப்பாக, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தரவுகள் சமரசம் இல்லாமல் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

x