காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்: காயமடைந்த பயணிகள்


மும்பையிலிருந்து துர்காபூர் சென்றுகொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் காற்றுக் கொந்தளிப்பு காரணமாகக் குலுங்கியதில் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது.

மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையிலிருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு நேற்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி-945 விமானம் சென்றுகொண்டிருந்தது. போயிங் பி737 ரக விமானமான இதில் 100-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

துர்காபூரில் தரையிறங்குவதற்கு முன்னதாகக் காற்றில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக விமானம் குலுங்கியது. இதில் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. எனினும், துர்காபூர் விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், காயமடைந்தவர்களுக்கு எல்லா விதமான மருத்துவ உதவிகளும் அளித்துவருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

விமானப் பயணங்களின்போது காற்று கொந்தளிப்பு ஏற்படுவது உண்டு. காற்றின் திசையில் ஏற்படும் மாறுபாடு, வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம், உயரமான மலைகள் அல்லது கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளின் மீது பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கொந்தளிப்பு உள்ளிட்ட காரணிகளால் இதுபோன்ற கொந்தளிப்புகள் ஏற்படும். பெரும்பாலும் இவற்றால் பெரிய அளவில் ஆபத்துகள் ஏற்படுவதில்லை; இதுவரை விமான விபத்துகளும் நேர்ந்ததில்லை. கொந்தளிப்புகள் ஏற்படும்போது விமானம் குலுங்கும் என்பதால் பயணிகளுக்கு அது பீதியூட்டும் அனுபவமாக அமையும். விதிவிலக்காக, சில சமயம் பயணிகள் காயமடைவது உண்டு.

x