> எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு இடையில் குடியரசுத் தலைவர் உரை: “ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன.” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரையாற்றும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர் என முழக்கமிட்டனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசும்போது இவ்வாறு முழக்கங்களை எழுப்பினர்.
> குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெற்ற எமர்ஜென்சி: எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய குடியரசுத் தலைவரும் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “இன்னும் சில மாதங்களில் இந்தியா குடியரசு நாடாக 75 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. இந்திய அரசியலமைப்பு கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் தாங்கி நிற்கிறது. நாட்டில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசியல் சாசனத்தின் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன.
1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அதைத் திணித்ததும் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது" என்று தெரிவித்தார். எமர்ஜென்சியை தனது உரையில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
> குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்: தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக பங்கேற்கும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றி வருகிறார். இதனை ஆம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்துள்ளனர். “டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை எதிர்த்து நாங்கள் மாநிலங்களவையில் போராட்டம் மேற்கொள்கிறோம்.
நாங்கள் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்கிறோம். நாட்டின் உயரிய இடத்தில் குடியரசுத் தலைவரும், அரசியலமைப்பும் உள்ளது. ஆனால், நீதி என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம். இது குறித்து நாங்கள் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் கலந்து பேசவில்லை. ஆனால், எங்கள் கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் உரையில் பங்கேற்கமாட்டார்கள்” என ஆம் ஆத்மியின் சந்தீப் தெரிவித்தார்.
> அத்வானி மருத்துவமனையில் அனுமதி: பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது. முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
> செங்கோல் விவகாரம் | சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையும் பாஜக எதிர்வினையும்: சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.
முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், “இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் வெளிப்படையாக தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமரியாதை செய்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
> இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
> “மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம்”: மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்சினையை பாமக எம் எல் ஏக்கள் கொண்டுவருவார்கள். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பாமக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972 ம் ஆண்டு அறிமுகம் செய்தது திமுகதான் காரணம்" என்றார்.
> நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாம் நாளாக இன்றும் (ஜூன் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
> அரை இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா பலப்பரீட்சை: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது. இரு அணிகளும் கடைசியாக டி 20 உலகக் கோப்பையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடரின் அரை இறுதி போட்டியில் மோதி இருந்தன. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 169 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 24 பந்துகளை மீதம் வைத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதனிடையே, நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
> சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் கடந்து சாதனை: இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சற்று சரிவுடன் ஆரம்பித்த சென்செக்ஸ் பின்னர் சரிவிலிருந்து மீண்டு 79,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தது. அதேபோல் நிஃப்டியும் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் புதிய உச்சம் தொட்டது.