சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் கடந்து சாதனை; நிஃப்டியும் புதிய உச்சம்


மும்பை: இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சற்று சரிவுடன் ஆரம்பித்த சென்செக்ஸ் பின்னர் சரிவிலிருந்து மீண்டு 79,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தது. அதேபோல் நிஃப்டியும் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் புதிய உச்சம் தொட்டது.

ஆம்ரம்ப வர்த்தகத்தில் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் 339.51 புள்ளிகள் உயர்ந்து 79,013.76 என புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது. ப்ளூ சிப்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கிகளின் உயர்வு இதற்கு காரணமாகின. அதேபோல், ஆரம்ப சரிவில் இருந்து மீண்ட நிஃப்டி 97.6 புள்ளிகள் உயர்ந்து 23,966.40 ஆக புதிய உச்சம் எட்டியது.

அல்ட்ரா டெக் சிமெண்ட், ஜெஎஸ்டபில்யு ஸ்டீல்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், கோடாக் மகேந்திரா வங்கி, மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வு அடைந்திருந்தன. மறுபுறம், மாருதி, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் எல் அண்ட் டி பங்குகள் சரிவில் இருந்தன.

"மதிப்பீடுகள் பற்றிய கவலைகள் இருந்த போதிலும் சந்தைகள் அண்மைக் காலமாக ஏற்றத்துடன் இருக்கிறது. இந்த வேகம் சென்செக்ஸை 80,000 என்ற நிலைக்கு கொண்டு செல்லும். சந்தையில் நிலவும் ஆரோக்கியமான போக்கு என்னவென்றால், வங்கி மற்றும் தொலைத்தொடர்பு பங்குகளின் அடிப்படையில் வலுவான போக்குகளால் சந்தை வழிநடத்தப்படுகிறது.

நேற்றுவரை பேரணியில் இணையாத ஆர்ஐஎல் காளைகளுடன் இணைந்திருப்பதால் இந்த வலுவான போக்குத் தொடரும்" என்று ஜியோஜித் ஃபைனான்ஸ் சர்வீஸின் தலைமை முதலீடு வியூகவகுப்பாளரான வி.கே. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் சரிவடைந்திருந்தன. அமெரிக்கச் சந்தை புதன்கிழமை நேர்மறையாக நிறைவடைந்திருந்தது.

முன்னதாக புதன்கிழமை சென்செக்ஸ் 620.73 புள்ளிகள் உயர்வடைந்து 78,674.25 என்ற புதிய உச்சத்திலும், நிஃப்டி 147.50 புள்ளிகள் உயர்ந்து 23,868.80 என்ற புதிய உச்சதில் நிறைவடைந்திருந்தன.