‘பத்திரிகையாளரைத் தாக்கினர்’ - பஞ்சாப் போலீஸ் மீது வழக்கு பதிவுசெய்த டெல்லி போலீஸ்!


டெல்லியில் உள்ள இம்பீரியல் ஓட்டலில், ஏப்ரல் 26-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பஞ்சாப் முதல்வர் பகந்த் மானும் கலந்துகொண்டனர்.

அப்போது அதில் பங்கேற்கச் சென்றிருந்த ‘இந்துஸ்தான் போஸ்ட்’ இதழின் நிருபர் நரேஷ் வாட்ஸ், அங்கிருந்த பஞ்சாப் போலீஸார் தன்னைத் தடுத்து நிறுத்தியதாகவும், அடையாள அட்டையைக் காட்டிய பின்னரும் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். பஞ்சாப் போலீஸார் தன்னைத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் டெல்லி போலீஸாரிடம் அவர் புகார் அளித்திருந்தார். தான் தாக்கப்பட்டது குறித்து இரு முதல்வர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னரும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தனது புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

நரேஷ் வாட்ஸ் மீதான தாக்குதலுக்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, சண்டிகர் பிரஸ் கிளப் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தன.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பஞ்சாப் போலீஸார் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். டெல்லி காவல் துறை, மத்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x