டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ: 3 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிபிஐ நேற்று கைது செய்தது.

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அர்விந்த் கேஜ்ரிவாலிடம் நேற்றுமுன்தினம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று அவரை கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்திய சிபிஐஅதிகாரிகள், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரினர். ஆனால் 3 நாள் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய்தது. இதனிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஜூன் 2-ம் தேதி வரை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் முடிவடைந்த பிறகு சரணடைந்த கேஜ்ரிவால் மீண்டும் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு கடந்த 20-ம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை 21-ம் தேதி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்தச் சூழலில், நேற்று சிபிஐஅதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறப்புநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “மதுபான ஊழல் பிரச்சினை அனைத்துக்கும் மணிஷ் சிசோடியாதான் காரணம் என்று கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இதை மறுத்த அர்விந்த் கேஜ்ரிவால், “நான் மணிஷ் சிசோடியா மீது எந்தப் பழியும் சுமத்தவில்லை. இந்த வழக்கில் எங்களுக்கு எந்ததொடர்பும் இல்லை என்றே கூறினேன். ஆனால், நான் மணிஷ் சிசோடியா மீது பழி சுமத்துவதாகக் கூறி, இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க சிபிஐ முயல்கிறது.” என்று பதிலளித்தார்.

x