ஜூலையில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - லட்சக்கணக்கான போலீஸாருக்கு விழிப்புணர்வு


பிரதிநிதித்துவ படம்

கடந்த ஆண்டு இயற்றப்பட்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்தான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் அங்கமாக, 5.65 லட்சம் போலீஸார், சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் 40 லட்சம் களச்செயற்பாட்டாளர்களுக்கு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் குறித்து சமூகத்தின் பலதட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இந்த பயிற்சி திட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகிய புதிய சட்டங்கள் குறித்து லட்சக்கணக்கான போலீஸார், சிறைத்துறை, தடயவியல், நீதித்துறை மற்றும் வழக்குகளை ஆராயும் அதிகாரிகளுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்தச் சட்டங்கள் முறையே பிரிட்டிஷ் கால இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றும், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவை என்பதால், தற்போதுள்ள குற்றவியல் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்புகள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆகியவற்றில் தேவையான மாற்றங்களை செய்துள்ளது. புதிய முறைக்கு தடையின்றி மாறுவதற்கு தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, தொழில்நுட்ப உதவியையும் வழங்குகிறது.

பொதுவெளியில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கம் குறித்து குடிமக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்வதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகங்கள், இணையவழி மூலமாக புதிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பரப்பி வருகின்றன. இந்த வகையில் கிட்டத்தட்ட 40 லட்சம் அடிமட்ட செயற்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சட்ட விவகாரங்கள் துறை, மாநிலத் தலைநகரங்களில் நான்கு மாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் உட்பட நீதித்துறையின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்தோர் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின் கீழ், பல்கலைக்கழக மானியக் குழுவானது 1,200 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலமாக ஏறக்குறைய 9,000 நிறுவனங்களுக்கும் புதிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு சென்று சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.