காஷ்மீர் பயங்கரம்: சுஞ்சவான் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு


காஷ்மீரின் பள்ளி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை அங்கு செல்கிறார். காஷ்மீர் பண்டிட்கள் மீள் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கும் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சூழலில், காஷ்மீரில் சில நாட்களாக பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. ஏப்ரல் 21-ல் பாராமுல்லா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி உள்ளிட்ட 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு அருகே சுஞ்சவான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வந்த பேருந்து மீது நேற்று அதிகாலை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தற்கொலைத் தாக்குதல் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சதியாக இது இருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கான ஆடையை பயங்கரவாதிகள் இருவரும் அணிந்திருந்ததாகவும், பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வைத்திருந்ததாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 15 பேர் பயணம் செய்த பேருந்தின் மீது வெடிகுண்டுகளை வீசும் பயங்கரவாதிகள், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்துவது இந்தக் காணொலியில் பதிவாகியிருக்கிறது.

x