139 கோடி ரூபாய் டொரண்டா கருவூல மோசடி வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.
1991 - 1996 காலகட்டத்தில், லாலு பிரசாத் பிஹார் முதல்வராக இருந்தபோது, கால்நடைகளுக்கான தீவனங்களை வாங்குவது தொடர்பாக 950 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ புலனாய்வு மேற்கொண்ட 5 வழக்குகளில், 4 வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனைக்கும் ஆளானார். டொரண்டா கருவூல வழக்கில் சிபிஐ நீதிமன்றம், பிப்ரவரி 21-ல் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜார்க்கண்ட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பிரபாத் குமார், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “41 மாதங்களாக லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார். 5 ஆண்டு சிறைத் தண்டனையில் பாதியை ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டார் என வாதிட்டோம்” எனக் கூறியிருக்கிறார்.
கடந்த பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் லாலு பிரசாத், ஜாமீனில் வெளிவந்து டெல்லியில் மகள் மிசா பாரதியுடன் தங்குவாரா அல்லது பிஹாருக்குச் சென்று தீவிர அரசியலில் ஈடுபடுவாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.