அசாம் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் மீதான கைது நடவடிக்கைக்கு அசாம் மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வழக்கறிஞர், பத்திரிகையாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர் ஜிக்னேஷ் மேவானி. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய இளம் தலைவரான அவர், உனாவில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து போராடியவர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் நாதுராம் கோட்சேவை பிரதமர் மோடி கடவுளாகக் கருதி வழிபடுபவதாக ட்வீட் செய்திருந்ததாக ஜிக்னேஷ் மேவானி மீது அசாம் பாஜகவைச் சேர்ந்தவரும், கோக்ரஜார் மாவட்டத்தின் பவானிபூரில் வசிப்பவருமான அரூப் குமார் தே போலீஸில் புகார் அளித்திருந்தார். குஜராத்தில் மதரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு ஏப்ரல் 20-ல் பிரதமர் மோடி செல்லவிருந்த நிலையில், அங்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துமாறு அவருக்கு ஜிக்னேஷ் மேவானி கோரிக்கை விடுத்திருந்ததையும் அரூப் குமார் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பாலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த ஜிக்னேஷ் மேவானியை புதன்கிழமை (ஏப்.20) இரவு 11.30 மணிக்கு அசாம் போலீஸார் கைதுசெய்தனர். அகமதாபாத் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கிருந்து விமானம் மூலம் அசாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்படவில்லை எனக் காங்கிரஸாரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். தனது குடும்பத்தினருடன் பேசவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குற்றவியல் சதி, இரண்டு சமூகங்களுக்கு இடையே பகையை ஏற்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல் போன்ற பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கோரி காங்கிரஸ் சார்பில், கோக்ரஜார் நகர நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். அவருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் வேண்டும் என அசாம் போலீஸ் கோரியிருந்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவல் விதித்திருக்கிறது நீதிமன்றம். ஜிக்னேஷ் மேவானி போலீஸ் காவலில் இருக்கும்போது கோக்ரஜாருக்கு வெளியே எங்கும் அழைத்துசெல்லப்பட கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதற்கிடையே ஜிக்னேஷ் மேவானி மீதான கைது நடவடிக்கைக்கு அசாம் காங்கிரஸ் தலைவர் புபேன் போரா கண்டனம் தெரிவித்திருக்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்த ஜிக்னேஷ் மேவானியைக் கைதுசெய்திருக்கும் போலீஸார், அவர் மீது எந்த அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர் என்பது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என புபேன் கூறியிருக்கிறார்.
“அசாம் மாநிலத்தில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. ஆனால், மக்களைக் காப்பதை விட்டுவிட்டு ஒரு ட்வீட்டைப் பற்றித்தான் போலீஸார் அதிக அக்கறை காட்டுகின்றனர்” என புபேன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.