சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு முதல் அதிமுக எம்எல்ஏகள் சஸ்பெண்ட்  வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


> மீண்டும் மக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா.

முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை அவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

> சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து: மூன்று முறை பாஜக எம்.பி., ஓம் பிர்லா இரண்டாவது முறையாக மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குரல் வாக்கொடுப்பின் மூலமாக என்டிஏ வேட்பாளர் சபாநாயகராக தேர்வானதைத் தொடர்ந்து, சபையின் ஆரவாரத்துக்கிடையில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். ஓம் பிர்லாவை வாழ்த்திய பிரதமர் மோடி, "உங்களுடைய புன்னகை இந்த ஒட்டுமொத்த அவையையும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது. இந்த அவையின் தலைவராக இரண்டாவது முறையாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மரியாதைக்குரிய விஷயம்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஓம் பிர்லாவிடம் சென்று கைகுலுக்கி அவரை வாழ்த்திய ராகுல் காந்தி, அருகில் இருந்த பிரதமர் மோடியுடனும் கை குலுக்கினார். இதனால் இந்தத் தேர்ல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு அரியதருணம் உருவானதை காண முடிந்தது.

> "எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்" - ராகுல் காந்தி: "சபாநாயகர் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்." என்று மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வாழ்த்தி பேசுகையில், “இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இண்டியா கூட்டணி சார்பில் எனது வாழ்த்துக்கள். இந்த அவை இந்திய மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். அதேபோல, இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரலும், பிரதிநிதித்துவமும் மிகவும் முக்கியமானது." என்று தெரிவித்தார்.

> அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ: பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) புதன்கிழமை கைது செய்தது. இந்தக் கைதினைத் தொடர்ந்து இதே வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதி்மன்றத்தின் உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவினை வாபஸ் பெற்றார்.

> “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே திமுகவின் எண்ணம்”: சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். தனித் தீர்மானம் கொண்டுவந்து பேசிய முதல்வர், “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும். அந்த நோக்கத்தோடு தான் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்து தரப்பு மக்களிடையே ஒரு சமநிலையை கொண்டுவருவதற்காக இடஒதுக்கீடு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாழ்த்தப்பட்டோர், பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சியடைய வழிவகை செய்து அதனை கடைப்பிடித்து வருகிறோம்.

சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதே பேரவையில் நேற்றுமுன் தினம் கூட பாமக உறுப்பினர் ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும்" என்றார்.

> அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: சட்டப்பேரவை தொடங்கியதுமே புதன்கிழமையும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

> கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 61 ஆக அதிகரிப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையிலும், ஏசுதாஸ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, கள்ளக்குறிச்சியில் 111, சேலத்தில் 30, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 12 பேர் என மொத்தம் 157 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த 2 உயிரிழப்புகளும் இன்று நேர்ந்துள்ளது.

> ராகுல் காந்திக்கு முதல்வா் ஸ்டாலின், விஜய் வாழ்த்து: மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “எனது அன்பு சகோதரர் ராகுல் காந்தியை, புதிய பொறுப்பிற்கு இந்தியா வரவேற்கிறது. அவரது குரல் மக்களவையில் தொடர்ந்து வலிமையாக முழங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளாா். “இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.

> “ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்”: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வியாழக்கிழமை இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரை சச்சின் டெண்டுல்கருக்காக நாங்கள் வென்றிருந்தோம். அது போல டி20 உலகக் கோப்பையை ரோகித் தலைமையிலான இந்திய அணி ராகுல் திராவிடுக்காக வெல்ல வேண்டும். பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்றவர் என்ற அடையாளத்தை திராவிட் பெற வேண்டும். வீரராக அந்த பட்டத்தை அவர் வெல்லவில்லை. அவர் அதற்கு தகுதியானவர்” என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

> ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்க நீதிமன்றம்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அவரது குற்றத்தை உறுதி செய்தார். இருந்தும் பிரிட்டிஷ் நாட்டு சிறையில் நீண்ட நாட்கள் இருந்த காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

x