ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 100 வயது முதியவர்.
இப்போது உள்ள கால கட்டங்களில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்த அடுத்த நாளே, அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தை கூறி வேறு நிறுவனங்களுக்கு செல்லும் போக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் கரோனா காலத்திற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டதோடு, வாழ்வாதாரத்தை இழந்தனர் பணியாளர்கள். இதனால், பல இன்னல்களை இன்று வரை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் முதியவர் ஒருவர். பிரேசில் நாட்டில்தான் இந்த அதிசயம் அரங்கேறியுள்ளது.
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வால்டர் ஆர்மன்ட் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். கடைமட்ட ஊழியராக சேர்ந்த வால்டர், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். 84 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி சாதித்த வால்டர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருக்கு சக ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தற்போது, 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வரும் வால்டர், அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் பணியை விரும்பி செய்தால் ஒரே நிறுவனத்தில் நீடிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் வால்டர், உடல் ஆரோக்கியத்திலும் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறார். வயிற்றுக்கு ஒவ்வாத உப்பு, சர்க்கரை கலந்து உணவை சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார். மேலும், தினசரி உடற்பயிற்சி செய்வதிலும் வால்டர் தவறுவதில்லையாம். கடைமையாற்றிவதில் கின்னஸ் சாதனை படைத்துள்ள வால்டர் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.