போலீஸாரிடம் சிக்கிய போலி டீசல் உற்பத்தியாளர்கள்!


மாதிரிப் படம்

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒரு பக்கம் மக்களை வதைத்துக்கொண்டிருக்க, ஹரியாணாவின் சிர்ஸா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெட்ரோலின் பெயரால் ஏமாற்றப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

அம்மாவட்டத்தில், இரண்டு பேர் போலி டீசலைத் தயாரித்து விற்றுவந்தது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக ஆதம்பூரைச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி தீபக், ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் சட்டவிரோதமாக எரிபொருள் தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸார் நேற்று (ஏப்.19) அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஏறத்தாழ 7,500 லிட்டர் போலி டீசல், பீப்பாய்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

பல டேங்கர் பீப்பாய்கள், டீசல் நாஸில் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுடன், 6.11 லட்சம் ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

மோட்டார் எண்ணெய், கிரீஸ் போன்றவற்றைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் பேஸ் எண்ணெய்; பாராஃபின்; கனிம டர்பென்டைன் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி போலி டீசலை அவர்கள் தயாரித்ததாகத் தெரியவந்திருக்கிறது. போலி டீசல் எப்படி விநியோகிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

x