மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி: இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு


புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்திதேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல், அரசியல் சாசன பாக்கெட் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார். அப்போதுகாங்கிரஸ் எம்.பி.க்கள் பாரத் ஜோடோ கோஷம் எழுப்பினர்.

புதிய அரசு பொறுப்பேற்றபின், 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் 280 எம்.பி.க்கள் பதவியேற்றனர். நேற்று 2-வது நாளாக பல கட்சி எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டில் ஒன்றை மட்டுமே தக்கவைக்கவேண்டும் என்பதால், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.பதவியை தக்கவைத்துக் கொண் டார். வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார்.

மக்களவையில் எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் தனது கையில் அரசியல் சாசன பாக்கெட் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு உறுதிமொழி வாசித்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பாரத் ஜோடோ கோஷமிட்டனர். உறுதி மொழி வாசித்து முடிந்ததும், ஜெய் ஹிந்த்! அரசியலமைப்பு வாழ்க! என ராகுல் முழங்கினார். ராகுலைப் போல் இண்டியா கூட்டணியின் பல எம்.பி.க்கள் தங்கள் கையில் அரசியல் சாசன புத்தகத்தை பிடித்தபடி பதவியேற்றனர்.

தமிழகம், புதுச்சேரி எம்பிக்கள்: தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பிக்கள் நேற்றுபதவியேற்றனர். பலர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். எம்.பி.க்கள் சசிகாந்த், கலாநிதி வீராசாமி, கனிமொழி, ஆ.ராசா,டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கோபிநாத், அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன், மலையரசன், தரணிவேந்தன், சுதா, ராணி, ஜோதிமணி உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

திமுக எம்.பி.க்கள் தங்களுக்கு பிடித்த தலைவர்கள் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் பெயர்களை கூறி வாழ்க என முழக்கமிட்டனர்.

இந்நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், கார்கே இல்லத்தில் நேற்றுநடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறினார்

x