மத்திய இணை அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி


லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியது. இதில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்தான் முக்கிய குற்றவாளி என்ற கோணத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ஜாமீன் வழங்கியது. தேர்தல் வெற்றியையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை ஆசிஷ் மிஸ்ரா தனது ஆட்களுடன் சென்று மிரட்டியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையில் அமர்வு, ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததுடன் ஒரு வாரத்திற்குள் அவர் சரணடைய வேண்டும் என்ற காலக்கெடுவையும் விதித்திருக்கிறது. மேலும் அலகாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி வழக்குத்தொடர்ந்தால் நன்கு அலசி ஆராயந்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கிறது.

x