நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் வாகனங்களை வெளியில் எடுக்கவே தயங்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் நகரில் மக்கள் பெட்ரோல் பங்க் முன்னர் வாகனங்களுடன் வரிசை கட்டி நின்ற காட்சி நேற்று அரங்கேறியது. காரணம், 500 பேருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரூபாய்க்கு வழங்குவதாக வெளியான அறிவிப்புதான்!
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்தது டாக்டர் அம்பேத்கர் மாணவர்கள் மற்றும் இளம் சிறுத்தைகள் அமைப்பு. நாடு முழுவதும் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்திருப்பதைக் கண்டிக்கும் வகையிலும் இதை நடத்திக்காட்டியிருக்கிறது இந்த அமைப்பு.
ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் மட்டும்தான் பெட்ரோல் வழங்கப்படும் எனும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அதற்கும் கூட்டம் முண்டியடித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாரை வரவழைக்கும் அளவுக்கு அங்கு பெரும் கூட்டம் திரண்டிருந்தது.
இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் மகேஷ் சர்வகோடா இதுகுறித்து ஊடகங்களிடம் பேசுகையில், “பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 120 ரூபாயைத் தாண்டிவிட்டது. எனவேதான் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு லிட்டர் பெட்ரோலை ஒரு ரூபாய்க்கு வழங்க முன்வந்தோம்” எனக் கூறினார்.