பிரதமர்களின் அருங்காட்சியகம்: முதல் டிக்கெட் வாங்கிய மோடி!


இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்த 14 தலைவர்கள் குறித்த ஆவணங்கள், தகவல்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை இன்று திறந்துவைத்திருக்கிறார் பிரதமர் மோடி. ஹோலோகிராம், மெய்நிகர் காட்சிகள், மல்டிமீடியா, தானியங்கி கியாஸ்க் சாதனங்கள் என பல அதிநவீன அம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. நமது பிரதமர்களின் சாதனைகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம், இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கலாம் எனும் நோக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்துக்கு அருகே 10,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘பிரதான்மந்திரி சங்க்ராலயா’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்துக்கு 2018-ல் ஒப்புதல் பெறப்பட்டது. 271 கோடி ரூபாய் செலவில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்ததினமான ஏப்ரல் 14-ல் இந்த அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்க பிரதமர் மோடி முடிவெடுத்தார். பிரதமர்கள் நமது அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி ஆட்சி நடத்துகின்றனர் என்பதால், அம்பேத்கர் பிறந்தநாளில் இந்த அருங்காட்சியகத்தைத் திறந்துவைக்க தீர்மானிக்கப்பட்டதாக பாஜக தெரிவித்திருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்த வ்ரலாற்றுத் தகவல்களும் இடம்பெறும். கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதமர்கள் ஆற்றிய சேவைகள் குறித்த தகவல்கள் முன்வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அவருக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் போன்றவை இதில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

பிரசார் பாரதி, தூர்தர்ஷன், ஃபிலிம் டிவிஷன், சன்ஸத் டிவி, பாதுகாப்புத் துறை, இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து திரட்டப்பட்ட ஆவணங்களும் தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இன்று இந்த அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, முதல் நுழைவுச் சீட்டையும் வாங்கினார். மெட்ரோ பயணம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் நுழைவுக் கட்டணத்தை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் மோடி அதற்காக டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

x