சிக்கிய 11 ஈரானியர்கள்: போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா?


இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 11 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கடல் எல்லையான அந்தமானை அடுத்த இந்திரா பாயிண்ட் பகுதியில் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளதாக கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு கடலோர பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற கடலோர பாதுகாப்புப் படையினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த கப்பலை சுற்றிவளைத்து கப்பலை சோதனையிட்டனர். அதில் 11 ஈரானியர்கள் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் படகுடன் 11 ஈரானியர்களையும் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

முன்னதாக கடலோர பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் என்.ஐ.ஏ, ரா, ஐ.பி, மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் துப்பாக்கிகளுடன் துறைமுக வளாகத்தை சுற்றிவளைத்த நிலையில் பிடிபட்ட 11 ஈரானியர்களையும் கடலோர பாதுகாப்புப் படையினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வந்த கப்பலை சோதனையிட்ட போது அதில் குறிப்பிட்ட அளவிலான போதைப் பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியானது.

பின்னர் பிடிபட்ட 11 ஈரானியர்களும் மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் அனைவரிடமும் அயப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த ஈரானியர்கள் 11 பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பாகவும், முக்கிய புள்ளிகளின் விவரங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x