ஆந்திர அமைச்சராகும் ரோஜா!


ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்களை இன்று வெளியிட்டிருக்கிறார்.

அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து சில நாட்களுக்கு முன்னர் ஜெகன் மோகன் முடிவெடுத்தார். அவரது வழிகாட்டுதலின்படி ஏப்ரல் 7-ல் அமராவதி நகரில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 24 அமைச்சர்களும் பதவிவிலகினர். அவர்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் பெற்றுக்கொண்டார். அவை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பப்பட்டன.

இந்நிலையில், புதிய அமைச்சர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அமைச்சரவையைச் சேர்ந்த 11 பேர் மீண்டும் அமைச்சராகின்றனர். 15 பேர் புதிதாக அமைச்சரவையில் நுழைகின்றனர்.

பிராந்தியம் மற்றும் சமூகங்களின் அடிப்படையில் அமைச்சரவையில் உரிய பிரதிநித்துவம் அளிக்க தீர்மானித்த ஜெகன் மோகன், அதன் அடிப்படையில் அமைச்சர்களைத் தேர்வுசெய்திருக்கிறார். முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த 8 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 பேர், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் அமைச்சராகின்றனர். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.

பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் எனும் கொள்கை கொண்ட ஜெகன் மோகன் இந்த முறை 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார். அவர்களில் நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜாவும் ஒருவர். முந்தைய அமைச்சரவையில் 3 பெண்கள் அமைச்சர் பதவியில் இருந்தனர்.

அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களுடன், புதியவர்களும் இணையும் அமைச்சரவை மூலம் சமநிலை கொண்ட அரசு நிர்வாகம் அமையும் என முதல்வர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் பதவியை இழந்தவர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. 2024-ல் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஜெகன் மோகன் இறங்கியிருக்கிறார்.

x