இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே அரசியல் களத்திலும் சமூக ஊடகத்திலும் ஒரு பெரிய விவாதம் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் இந்தியாவில் ஏற்படுமா, அப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்ற விவாதம்தான் அது. முதலில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களைப் பார்க்கலாம்.
2019 அதிபர் தேர்தலில் 52 சதவீத வாக்குடன் கோத்தபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தார். அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வென்று அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்ச பிரதமரானார். ஆனால், ஆட்சியில் அமர்ந்த ஆரம்பம் முதலே நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் சரியாகக் கையாளவில்லை. ஆட்சியமைத்த சில மாதங்களில் வரியை 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைத்தார் கோத்தபய. இதனால் அரசுக்கு 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. 2019-ம் ஆண்டு ‘ஈஸ்டர் சண்டே’ வெடிகுண்டு சம்பவம், அடுத்ததாக 2020ம் ஆண்டு கோவிட் தொற்று என பல்வேறு சம்பவங்கள் இலங்கையை வெகுவாகப் பாதித்தன. குறிப்பாக அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, நாட்டின் கடன் அதிகரித்தது.
இதற்கிடையே, உரங்கள் இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. முழுவதுமாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவதாக அந்நாடு இயற்றிய சட்டம் இலங்கைக்கு பேரிடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மக்கள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராடி வந்தனர். ஆனால், விளைச்சல் காலம் முடிந்தே சட்டத்தைத் திரும்ப பெற்றது அந்நாட்டு அரசு. மிகக் குறைந்த விளைச்சலால் பல்வேறு பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. அதன்பிறகு வீழ்ச்சி தொடங்கியது.
இலவசத்தால் இழப்பு நேருமா?
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், “பஞ்சாப், டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மக்களுக்கு அதிக இலவசங்களை அளித்துள்ளன. இதனால் இலங்கை போன்ற சூழல் இந்த மாநிலங்களுக்கு ஏற்படலாம்” என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ், “அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் இலங்கையில் ஏற்பட்டது போல் இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்” என்று தெரிவித்தார். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், “இலங்கையில் நிலை மிகவும் மோசமானது. இந்தியாவும் அதே பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதேசமயம், “இலங்கை வழியில் இந்தியா போய்க்கொண்டிருப்பது உண்மை. அதற்கு இலவசங்களைவிட மத்திய அரசின் அதிகாரல் குவியல்தான் காரணம்” என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். “எல்லா திட்டங்களும் விவாதமே நடத்தப்படாமல் நிறைவேற்றி அது எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என நினைப்பதுதான் உண்மையான விளைவை ஏற்படுத்தும்” என்று மத்திய அரசை அவர் கடுமையாகச் சாடினார். இப்படி அரசியல்வாதிகளும் பொருளாதார அறிஞர்களும் தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் விவாத மையமாக மாறியிருக்கின்றன.
இந்தியாவையும் இலங்கையையும் ஒப்பிடலாமா?
இலங்கையின் மொத்தமக்கள் தொகை 2.15 கோடி. நம் நாட்டின் தலைநகரைவிட குறைவான மக்கள் தொகை அது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலா, விவசாயம், சேவை போன்ற துறைகளினால் மட்டுமே இயங்கிவருகிறது. சுற்றுலா குறைந்துபோனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆனால் இந்தியா அப்படி இல்லை. சேவை, உற்பத்தி, விவசாயம் என பல்வேறு துறைகளில் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஏற்றுமதியிலும் முன்னணி வகிக்கிறது.
”இலங்கையின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு 80,000 கோடி அமெரிக்க டாலர். ஆனால் இந்தியா 3 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடு. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 200 கோடி டாலர். இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 6,18,000 கோடி டாலர். இலங்கையின் ஆண்டு ஏற்றுமதியின் மதிப்பு 15,000 கோடி டாலர். ஆனால், இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 418000 கோடி டாலர்” என பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா வெளியிட்டிருக்கும் புள்ளிவிவர ஒப்பீடு கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் நிலை என்ன?
சிறிய நாடான இலங்கையையும் பெரிய நாடான இந்தியாவையும் ஒப்பிட முடியாதுதான். ஆனால், இந்தியாவில் நடக்கிற நிகழ்வுகள் இலங்கையின் நிலைமைக்கு நம்மையும் அழைத்துச் சென்றுவிடுமா என்ற அச்சம் எல்லோரிடத்திலும் உள்ளதை மறுக்க முடியாது. குறிப்பாக மாநிலங்களின் கடன் சுமை வெகுவாக அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கடன்சுமை பல இலவச அறிவிப்புகளால் அதிகரித்துள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தின் கடன்சுமை 6 லட்சம் கோடியாக உள்ளது. மேற்கு வங்கத்தின் கடன்சுமை 5 லட்சம் கோடி. தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்து பின்பு மாநிலத்தின் கடன்சுமை பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று கருதப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை ஓராண்டுக்குள் முறையே லிட்டருக்கு 27 ரூபாய், 25 ரூபாய் அதிகரித்து பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. இந்தச் சுமை மக்களை நேரடியாகப் பாதித்து வருகிறது. மேலும், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
இந்தக் காரணிகள் எல்லாம் பொருளாதாரம் சரிவர இயங்கவில்லை என்பதற்கான அறிகுறிகள். ரஷ்யா - உக்ரைன் போரை ஒரு காரணமாக பாஜக சொன்னாலும் விலைவாசி உயர்வை மக்கள் மீது திணிப்பது எப்படி சரியாகும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அதனால் இந்த பிரச்சினைகளை வெகு சீக்கிரம் தீர்க்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.