படிப்பை முடித்த 6 மாதத்தில் பட்டம் வழங்கவும்: கல்லூரிகளுக்கு யுஜிசி கறார்


பட்டப்படிப்பை முடித்த 6 மாதங்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கிட வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவதும் காலதாமதம் செய்யப்படுவதாகவும், இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்த பின்னரும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டம் வழங்காமல் பல கல்வி நிறுவனங்கள் இழுத்தடிப்பதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.

இதனால் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டும். அவ்வாறு பட்டம் வழங்காத உயர்கல்வி நிறுவனங்களின் மீது விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

x