கைவிலங்கிட்ட கைதியுடன் கங்கையில் புனித நீராடிய காவலர்கள்!


பாவங்களைக் கழுவ கங்கையில் புனித நீராடுவது இந்தியாவில் பலரது வழக்கம். எனினும், சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கையில் மூழ்கி எழுந்த சிலரைப் பார்த்துப் பலரும் ஆச்சரியப்பட்டனர். காவல் துறையைச் சேர்ந்த அவர்கள் காக்கி சீருடையும் கையில் விலங்குமாக, கைதி ஒருவருடன் சேர்ந்தே கங்கையில் புனித நீராடியதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம்.

மோசடி வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட நபரைக் கைதுசெய்ய மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் நகரின் லால்பாக் காவல் நிலையத்திலிருந்து, உத்தர பிரதேசத்தின் பிரதாப்கருக்குச் சென்ற காவலர்கள் அவர்கள். பிப்ரவரி 16-ல் அவரைக் கைதுசெய்த பின்னர், திரும்பிச் செல்லும் வழியில் பிரயாக்ராஜில் கங்கையில் புனித நீராட காவலர்கள் திட்டமிட்டனர்.

இப்படி கைதியும் காப்புமாக அவர்கள் புனித நீராடிய காட்சியைச் சிலர் செல்போனில் படம்பிடித்து காணொலி வடிவில் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்த செய்திகள், சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது புர்ஹான்பூர் மாவட்ட காவல் துறை.

குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்த கையோடு, நேராகக் காவல் நிலையத்துக்குத்தான் அவர்கள் சென்றிருக்க வேண்டுமே தவிர, புனித நீராடியிருக்கக் கூடாது என்று புர்ஹான்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராகுல் குமார் லோதா தெரிவித்திருக்கிறார்.

x