ஏராளமான விமானிகள் இடைநீக்கம்: இண்டிகோவின் நடவடிக்கையால் அதிர்ச்சி!


சம்பளக் குறைப்பால் அதிருப்தியில் இருந்த இண்டிகோ விமான நிறுவன பைலட்டுகளில் பலர், இன்று (ஏப்.5) விடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது இண்டிகோ நிர்வாகம்.

என்ன பிரச்சினை?

278 விமானங்களைக் கொண்ட பெரிய நிறுவனமான இண்டிகோ இந்தியாவில் முக்கியமான விமான சேவை ஆகும். உள்நாட்டில் விமானப் பயணம் செய்யும் இருவரில் ஒருவர் இண்டிகோவைப் பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கரோனா பரவல், பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால், இண்டிகோ பைலட்டுகளுக்கு 28 சதவீதமும், பிற ஊழியர்களுக்கு 38 சதவீதமும் சம்பளம் குறைக்கப்பட்டது.

எனினும், பெருந்தொற்றுக் காலத்துக்கு நடுவிலும் தாக்குப்பிடித்த இண்டிகோ நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 130 கோடி ரூபாய் லாபம் பார்த்திருக்கிறது. ரொக்கக் கையிருப்பாக 17,318 கோடி ரூபாய் இருக்கிறது. இந்தச் சூழலில், தங்கள் சம்பளத்தில் மட்டும் மாற்றம் இல்லையே எனும் வருத்தத்தில் இண்டிகோ ஊழியர்கள் இருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல், குறைக்கப்பட்ட சம்பளத்துடன் வேலை பார்த்து வந்த இண்டிகோ விமானிகளும், பிற பணியாளர்களும் ஒருகட்டத்தில் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே, கரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான சேவைகள் மீண்டும் சுறுசுறுப்படைந்திருக்கும் நிலையில் மீண்டும் முழுச் சம்பளம் வேண்டும் என்று இண்டிகோ ஊழியர்கள் மத்தியில் பேச்சு எழத் தொடங்கியது. விமான நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இணைந்து மாபெரும் சங்கத்தைத் தொடங்கும் பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இண்டிகோ பணியாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை உருவாக்க திட்டமிட்டனர்.

இதை உணர்ந்துகொண்ட இண்டிகோ நிர்வாகம், சம்பளக் குறைப்பில் மாற்றம் செய்தது. பைலட்டுகளுக்கு 28 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதம் எனும் அளவில் சம்பளக் குறைப்பு என அறிவித்தது. பிறருக்கு 38 சதவீதம் என்பது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நவம்பர் 1-ல் மீண்டும் 6.5 சதவீதம் சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும் இண்டிகோ நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. எனினும், நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் திருப்தி அடையாத இண்டிகோ விமானிகள் சிலர், ஏப்ரல் 5 (இன்று) மொத்தமாக விடுப்பு எடுக்க தீர்மானித்தனர்.

இதையடுத்து, விடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்த விமானிகள் அனைவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது இண்டிகோ நிர்வாகம். இந்நடவடிக்கை இண்டிகோ ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

x