புதுடெல்லி: நீட் - யுஜி 2024 மருத்துவத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தினை மத்திய அரசு சிபிஐ வசம் ஒப்படைத்த சில மணிநேரங்களுக்கு பின்னர் இது நடந்துள்ளது.
நீட் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர்களை சிபிஐ எடுத்துக்கொள்ளும். அதேபோல் மாநில காவல்துறை கைது செய்துள்ள தனி நபர்களையும் சிபிஐ தங்களின் காவலில் எடுத்துக்கொள்ளும். இந்த விவகாரத்தில் உள்ள பெரிய சதியை சிபிஐ வெளிக்கொண்டுவரும் என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு செயல்பாடுகளில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை நடந்துள்ளதாக வெளியான புகார்களைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீட் தேர்வில் சில முறைகேடுகள், மோசடி, ஆள்மாறாட்டம் குறித்த புகார்கள் வெளியாகியுள்ளன. தேர்வு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மைக்காக, ஒரு சிறிய ஆய்வுக்கு பின்னர் ஒரு விரிவான விசாரணைக்காக இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க கல்வித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் - யுஜி தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 4,750 தேர்வு மையங்களில் 24 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாக ஜூன் 4ம் தேதி வெளியாகின.
முடிவுகள் வெளியான சில நாட்களுக்கு பின்னர், நீட் - யுஜி தேர்வுத் தாள் கசிவு குறித்த புகார்கள் வெளியாகின. இது தொடர்பாக 4 தேர்வர்கள் உட்பட 7 பேரை பாட்னா போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தேர்வர்கள், தேர்வுக்கு முந்தைய நாளில் தங்களுக்கு வினாத்தாள் கிடைத்ததாக எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் கொடுத்தனர்.
இந்த நிலையில், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை திரும்ப நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால் அரசியல் குழப்பம் உருவாகியது. என்றாலும், சில தனிப்பட்ட சம்பவங்களால் ஆயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலத்தை அரசு பாதிப்படையச் செய்யாது" என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.