`இலவசத்தால் இலங்கை நிலைமைதான் ஏற்படும்'- பிரதமரை அலர்ட் செய்த அதிகாரிகள்


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இலவசங்களை வழங்கும் பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் மாநிலங்கள் இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என பிரதமர் மோடியை அலர்ட் செய்துள்ளனர் பல்வேறு துறைகளின் செயலாளர்கள்.

மாநில அரசுகளில் பணியாற்றி வரும் மத்திய அரசு துறைகளிலுள்ள செயலாளர்கள் உட்பட பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் 4 மணிநேரம் நடைபெற்ற நிலையில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கர திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக பஞ்சாப், டெல்லி, தெலங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம் ஆகியவற்றில் மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் பொருளாதார ரீதியாக நிலைக்கத்தக்கவை அல்ல என பிரதமரிடம் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிகிறது. அத்தகைய இலவச திட்டங்களால் மாநிலங்களின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி செல்வதாகவும் மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மாநில நிதிநிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்டதுபோன்ற பொருளாதார நெருக்கடியை அத்தகைய மாநில அரசுகள் சந்திக்க நேரிடும் என பிரதமர் மோடியிடம் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் எடுத்துரைத்துளனர்.

அதே நேரத்தில், பாஜக ஆளும் உபி, கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் இலவச வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆனால், இந்த மாநிலங்கள் குறித்து அதிகாரிகள் வாய்திறக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

x