ஆண் தொண்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சூரஜ் ரேவண்ணா கைது


சூரஜ் ரேவண்ணா

பெங்களூரு: மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்.எல்.சி.,யும், பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணனுமான சூரஜ் ரேவண்ணா, கட்சியின் ஆண் தொண்டர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கட்சித் தொண்டரை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதாக சனிக்கிழமை கர்நாடகா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து சிஇஎன் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சூரஜ் அழைத்து செல்லப்பட்டார். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் போலீஸார் அவரைக் கைது செய்தனர். சூரஜ் ரேவண்ணா மீது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) பிரிவு 506 (குற்றவியில் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, சூரஜ் ரேவண்ணா மீது 24 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கன்னட சேனலுக்கு வெள்ளிக்கிழமை இரவு அளித்துள்ள பேட்டியில், “ஜூன் 6-ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் கனிகட்டா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சூரஜ் ரேவண்ணாவை சந்தித்தேன். அப்போது தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். இதனை வெளியே சொன்னால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்” என்றார்.

இதனிடையே சூரஜ் ரேவண்ணா, ஹொலேநர்சிப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “சூரஜ் ரேவண்ணா பிரிகேட் அமைப்பின் பொருளாளராக இருக்கும் சிவகுமார்(30), அவரது நண்பர் சேத்தன்(24) ஆகியோர் ரூ.5 கோடி தராவிட்டால் என் மீது பொய் புகார் தரப்போவதாக மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சிவகுமார், சேத்தன், சேத்தனின் 21 வயதான மனைவி ஆகிய மூவர் மீதும் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரைமறுத்துள்ள சிவகுமார், “சூரஜ்ரேவண்ணா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ய மறுக் கின்றனர்” என தெரிவித்திருந்தார்.

சூரஜ் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரன், ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரனாவார். பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x