பெட்ரோல் விலை எகிறும் சூழலில், ஹைட்ரஜன் காரில் நாடாளுமன்றம் சென்ற நிதின் கட்கரி!


சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் எரிபொருட்களுக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த இந்தியா உட்பட பல நாடுகள் முயன்றுவருகின்றன. அந்த வகையில் ஹைட்ரஜனில் இயங்கும் கார், வேன், கப்பல் போன்றவை வெளிநாடுகளில் தயாரித்து சோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட காரில் நாடாளுமன்றத்துக்குப் பயணித்ததன் மூலம் இவ்விஷயத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறார் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. மார்ச் முதல் வாரத்தில், ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட டொயோட்டா மிராய் கார் விற்பனையை நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், முதன்முதலாக டொயோட்டா மிராய் வகை காரில் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு நாடாளுமன்றம் சென்றிருக்கிறார் நிதின் கட்கரி.

ஹைட்ரஜன் காரில் மூன்று வகைகள் உள்ளன. நிதின் கட்கரி பயன்படுத்தியிருப்பது பசுமை வகை ஹைட்ரஜன் கார். இதன் பயன்பாட்டில் ஒரு கிலோமீட்டருக்கு ஒன்றரை ரூபாய் செலவாகும். தற்போது 5 அல்லது 6 டாலர் செலவாகும் நிலையில், 1 டாலருக்கு அதைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன் விநியோக நிலையங்களை உருவாக்குவது அடுத்த கட்டம் ஆகும்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, “தற்போது உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலை உயர்ந்துவருகிறது. இந்நிலையில், தற்சார்பு முறையில் எரிபொருள் உற்பத்தியைத் தொடங்குவது அவசியமாகிறது. அதை நோக்கிய முதல் படி இந்தக் கார்” என்றார்.

தற்போது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில், நிதின் கட்கரி ஹைட்ரஜன் காரைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

x