பெருந்தொற்றுக் காலத்தில் போலி மருந்துகள் 47 சதவீதம் அதிகரிப்பு!


கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் 2020 முதல் 2021 வரையில் நடத்தப்பட்ட ஆய்வில், தரமற்ற மற்றும் போலி மருந்துகள் 47 சதவீத மருந்துகள் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை, கரோனா தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள், முகக்கவசங்கள், சானிடைசர்கள் ஆகியவற்றில் தரமற்ற மற்றும் போலித் தயாரிப்புகள் அதிகரித்திருக்கின்றன. போலி மருந்துகள் தடுப்பு குறித்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அங்கீகார தீர்வு வழங்குநர்கள் சங்கம் (ஏஎஸ்பிஏ) வெளியிட்டிருக்கும் சமீபத்திய ஆய்வறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

2018 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தரமற்ற மற்றும் போலி மருந்துகள் 20 சதவீதம் அதிகரித்தன. பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், 23 மாநிலங்களில் இந்தப் போக்கு அதிகரித்தது கண்டறியப்பட்டது. இது இந்தியாவுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. கடந்த 10 ஆண்டுகளாகவே மருந்து உற்பத்தித் துறையில் தரமற்ற மற்றும் போலித் தயாரிப்புகள் 111 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

"பெருந்தொற்று நெருக்கடி அதிகரித்ததை, இதுபோன்ற தொழில்களில் ஈடுபடும் சட்டவிரோத கும்பல்கள் ஒரு வாய்ப்பாகவே பயன்படுத்திக்கொண்டன" என்று கூறியிருக்கும் ஏஎஸ்பிஏ அமைப்பின் தலைவர் நகுல் பஸ்ரிச்சா, இதுபோன்ற தரமற்ற மருந்துப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், சுகாதார வசதி பெறும் உரிமையை மீறுகின்றனர் என்றும், இந்தப் போக்கு தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதன் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது என்றும் வேதனை தெரிவித்திருக்கிறார்.

மருந்து மூலப்பொருட்கள் தயாரிப்பில் ‘கியூஆர் கோட்’ முறையை மத்திய அரசு கட்டாயப்படுத்தியிருப்பதை வரவேற்கும் நகுல் பஸ்ரிச்சா, “மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், துருக்கி ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவிலான அங்கீகாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. இந்தியாவும் அதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

x