ஜூனில் கரோனா நான்காம் அலை: விசிக எம்பி நோட்டீஸ்!


ரவிக்குமார்

இந்தியாவில் ஜூன் மாத இறுதியில் கரோனா நான்காவது அலை தாக்கும் வாய்ப்பிருப்பதாக கான்பூர் ஐஐடி கணித்துள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எனக்கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்பி-யான ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 723 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 1,567 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 35 பேராக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் ஜூன் மாதத்தில் கரோனா நான்காம் அலை பரவக்கூடும் என கான்பூர் ஐஐடி நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்பி-யான ரவிக்குமார் இன்று கவனஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜூன் 22 -ல் கரோனா நான்காவது அலை தாக்கத் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அதை எதிர்கொள்வதற்கு ஒன்றிய அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன எனக் கேட்டு இன்று கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

x