நீட்டிக்கப்படும் இலவச ரேஷன் திட்டம்: நிம்மதியடைந்த மக்கள்!


இலவச ரேஷன் பொருட்களை வழங்கும் ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் பல லட்சம் ஏழைகள் உணவுக்கு பயமின்றி நிம்மதி அடைந்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்று உலகெங்கும் மிகக் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நமது அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அங்கு மக்கள் உணவுப் பஞ்சத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அப்படி எதுவும் நடக்காமல் காப்பாற்ற இந்திய அளவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன என்றாலும், இலவச ரேஷன் பொருட்களை வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் வேலையின்றி வாடிய, போதிய வருமானம் இன்றி தவித்த பல லட்சம் இந்திய குடும்பங்களைப் பசியின்றி வாழவைத்தது என்றே சொல்லலாம்.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.

பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நேரத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் இந்தத் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது. முதலில் 3 மாதங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ஏற்படுத்திய நன்மைகளைக் கருத்தில் கொண்டு, பல முறை நீட்டிக்கப்பட்டு, இந்த மாதம் (மார்ச்) வரை உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 80 கோடி மக்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு பசியின்றி வாழ்வதற்கான உத்தரவாதம் கிடைக்கப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3.4 லட்சம் கோடி ரூபாய் செலவில் 1,003 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x