கவனம் குவிக்கும் காஷ்மீர் கோப்பு: சலனத்துக்குள்ளாகும் தேசம்!


1990-ல் காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், துப்பாக்கி முனையில் அவர்கள் வெளியேற்றப்பட்ட அவலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தவிர்க்க முடியாத திரைப்படம்

ஜம்முவில் உள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் திரையிடப்பட்டபோது, படத்தைப் பார்த்த காஷ்மீர் பண்டிட்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்வையாளர்களிடம் கூறினார்: “இந்தப் படம் உங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் என்ன நடக்க வேண்டும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.” அவர் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது.

திரையுலகில் ஆமிர் கான், ராம்கோபால் வர்மா தொடங்கி, அரசியல் களத்தில் அகிலேஷ் யாதவ், அர்விந்த் கேஜ்ரிவால் வரை பலரின் மத்தியில் ஏதேனும் ஒரு விதத்தில் பேசப்படும் கலைப்படைப்பாகியிருக்கிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. கூடவே, காஷ்மீர் அரசியல் தலைவர்களான ஃபரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி போன்றோர் முன்னே பெரும் கேள்விகளையும் இப்படம் முன்வைக்கிறது.

பிரதமர் மோடி இப்படத்தைப் பாராட்டுகிறார். பாஜக ஆளும் மாநிலங்கள் வரிவிலக்கு அளித்திருக்கின்றன. குறிப்பாக, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் கோரிக்கையை ஏற்று போபாலில் ‘காஷ்மீர் பண்டிட் இனப்படுகொலை அருங்காட்சியகம்’ ஏற்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறார். யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவில் விவேக் அக்னிஹோத்ரி, அனுபம் கெர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவை பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகின்றன.

பிரச்சினையின் பின்னணி

ஜம்மு திரையிடலின்போது, இப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த அனுபம் கெர் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அவர், தனது தாய்மாமா, சிறுகச் சிறுக சேமித்துக் கட்டிய வீட்டிலிருந்து மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதைப் பற்றி கண்ணீருடன் நினைவுகூர்ந்தார். அனுபம் கெரின் மாமாவைப் போல ஏராளமானோர் தங்கள் உடைமைகளையும், சொத்துகளையும் விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. பலர் உயிரையே இழக்க நேர்ந்தது.

1980-களில் காஷ்மீர் அரசியலில் நிலவிய ஸ்திரத்தன்மையின்மை, அங்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் பலத்தை அதிகரிக்க வழிவகுத்தது. 1986-ல், பாபர் மசூதியைத் திறந்து அங்கு பூஜை செய்ய இந்துக்களுக்கு ராஜீவ் காந்தி அரசு அனுமதி அளித்தது. அந்த முடிவுக்குச் செல்ல அரசுக்கு ஷா பானு ஜீவனாம்ச வழக்கு உள்ளிட்ட அழுத்தங்கள் இருந்தன. ஷரியத் சட்டத்துக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையில் முஸ்லிம் பெண்கள் (மணமுறிவு உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை-1986 ராஜீவ் அரசு கொண்டுவந்தது.

அப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அரசு எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதைச் சமாளிக்கவே பாபர் மசூதியைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, இந்த விவகாரத்தின் எதிர்மறை விளைவுகள் காஷ்மீர் பண்டிட்கள் மீது விழுந்தன. அதைவைத்து தீவிர மதப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், காஷ்மீர் பண்டிட்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) எனும் பயங்கரவாத அமைப்பு, காஷ்மீரிலும், பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரிலும் நிலைபெற்றிருந்தது.

தொடங்கியது வெளியேற்றம்

முன்னதாக, 1987-ல் நடந்த தேர்தலில், பல்வேறு தேர்தல் முறைகேட்டுப் புகார்களுக்கு மத்தியில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. எனினும், அந்த ஆட்சி நிலைக்கவில்லை. 1989 டிசம்பர் 8-ல் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா, ஜேகேஎல்எஃப் அமைப்பால் கடத்தப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 13 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்கள் வைத்த நிபந்தனையை அப்போதைய முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஏற்கவில்லை. எனினும், மத்திய அரசு அவர்களை விடுவிக்க முடிவெடுத்தது.

ருபையா கடத்தல் சம்பவத்துக்குப் பின்னர், பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக, காஷ்மீரின் முந்தைய ஆளுநரான ஜக்மோகன் மீண்டும் ஆளுநராக்கப்பட்டார் (பின்னாட்களில் ஜக்மோகன் பாஜகவில் இணைந்தார்). அவரது நியமனத்தைக் கண்டித்து ஃபரூக் அப்துல்லா பதவி விலகினார். அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

பாகிஸ்தானின் ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு, காஷ்மீரிலிருந்து வெளியேறுமாறு பண்டிட்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போடச் சொல்லி பண்டிட்கள் மிரட்டப்பட்டனர். அரசு சார்பில் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்ட காஷ்மீர் பண்டிட்கள் வேறு வழியின்றி வெளியேற முடிவெடுத்தனர். 1990 ஜனவரி முதல் காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றம் தொடங்கியது. பல ஆண்டுகள் நீடித்த அந்த வெளியேற்றத்தில் 75 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர். பலர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஓரளவேனும் வசதி இருப்பவர்கள் சமாளித்துக்கொண்டனர். ஏழைகள் நிலைமைதான் மோசமாகியது. அங்கு இன்னமும் பல பண்டிட் குடும்பங்கள் வசித்துவருகின்றன.

எதிர்மறை விமர்சனங்கள்

சமீபகாலமாகத் தன்னுடைய படங்களில் உண்மைச் சம்பவங்களையே சித்தரிப்பதாகச் சொல்கிறார் விவேக் அக்னிஹோத்ரி. எனினும், ‘தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ உள்ளிட்ட அவரது படங்கள் இதற்கு முன்பு இந்த அளவுக்குக் கவனக்குவிப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. இந்தப் படமும் ஒரு சிறந்த திரைப்படைப்பாக முன்னணி ஊடகங்களின் விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

“நீதியைப் பெறும் உரிமைக்கான முதல் படி இப்படம்” என்று விவேக் அக்னிஹோத்ரி கூறுகிறார். ஆனால், காஷ்மீர் பண்டிட்கள், பிற இந்துக்கள் மீதான வன்முறைகளைப் பற்றியே பிரதானமாக இப்படம் பேசுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். காஷ்மீரில் அரங்கேறிய பயங்கரவாதச் சம்பவங்களில், இந்துக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், சீக்கியர்கள் போன்றோரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சஜத் லோன், “இன்று எங்களுடன் வசிக்கும் பண்டிட்களை சகோதரர்களாகத்தான் கருதுகிறோம்” என்கிறார். மதச்சார்பற்ற மக்கள் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் ஜாவேத் பீக் போன்றோர், அந்தக் காலகட்டத்தில் பண்டிட்கள், பிற இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்கள் தடுக்கத் தவறிவிட்டதாகவும் ஒப்புக்கொள்கிறார்கள். எனினும், இன்றைய சூழலில், பாகிஸ்தான் ஆதரவு சித்தாந்தம் இல்லாத எளிய முஸ்லிம்கள் மீதும், பழிச்சொல் விழுவதுதான் ஆபத்தான விஷயம்.

படத்தில், பல பண்டிட்களைக் கொன்றழிக்கும் பிட்டா கராத்தே பாத்திரத்தை விவேக் அக்னிஹோத்ரி அதிக மிகைப்படுத்தல் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார் என்பதை, பல ஆண்டுகளுக்கு முன்னர் கராத்தே அளித்த பேட்டியிலிருந்து உணர முடிகிறது. “மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தால், என் தாயைக் கூட கொல்வேன்” என்று எந்தச் சலனமும் இல்லாமல் பிட்டா சொல்லும் காணொலி இன்றும் இணையத்தில் சாட்சியமாக இருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களை மட்டுமல்ல, முஸ்லிம்களைக் கொன்றதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். அதைத்தான் விவேக் அக்னிஹோத்ரி காட்டாமல் தவிர்த்துவிடுகிறார்.

அரசியல் ஆதாயம்

இந்தப் படத்தை பாஜக தனது அரசியல் வெற்றிக்காகப் பயன்படுத்திக்கொள்கிறது எனும் விமர்சனத்தைப் புறந்தள்ள முடியாது. வழக்கமாக இந்துத்துவ ஆதரவாளர்கள் எழுப்பும் ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் திரையரங்குகளில் ஒலிக்கிறது. சில இடங்களில் ‘மோடி வாழ்க!’ எனும் முழக்கமும்!

2014 மக்களவைத் தேர்தலின்போது பண்டிட்களை மீண்டும் காஷ்மீருக்குத் திரும்பச் செய்வதாக பாஜக வாக்குறுதி அளித்தது. எனினும், 2019-ல் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டக்கூறை ரத்து செய்த பின்னரும் பண்டிட்கள் அங்கு திரும்புவதற்கு வழிவகுக்கப்படவில்லை என விமர்சனங்கள் உண்டு. இப்படத்தில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசின் முடிவுகள் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், அதன் பின்னர் அமைந்த வி.பி.சிங் அரசில் ஆளுங்கூட்டணியில் பங்கெடுத்த பாஜகவின் நிலைப்பாடு குறித்த விமர்சனங்கள் இல்லை.

காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி கொள்கை கொண்ட மாணவர்கள், மதச்சார்பின்மை கொள்கை கொண்டவர்கள் எனப் பலர் மீதான பரவலான விமர்சனத்துக்கும் இப்படம் வழிவகுத்திருக்கிறது. ஹிட்லர் - கோயபல்ஸ் பாணி திரைப்படம் என இப்படத்தை விமர்சித்திருக்கிறார் ஃபரூக் அப்துல்லா. ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் நடந்த நிகழ்வுகள், அவரது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அவரது மகனும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா சுட்டிக்காட்டியிருக்கிறார். “இது திரைப்படமா ஆவணப்படமா” எனக் கேள்வி எழுப்பியிருக்கும் அவர், “ஆவணப் படம் என்றால் உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அதையெல்லாம் தாண்டி படம் பெருமளவில் மக்களைச் சென்றடைந்துவிட்டது.

விவேக் அக்னிஹோத்ரி

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ரோட் தீவு, காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என ஏற்கெனவே, அங்கீகரித்திருக்கிறது. காஷ்மீர் பண்டிட்களின் மீள் குடியேற்றத்துக்கு அரசு வழிவகுக்க வேண்டும் என உலகளாவிய புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் அமைப்பு (ஜிகேபிடி) கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, காஷ்மீரைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தன்கா தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். காஷ்மீரி என்பதால் தனிப்பட்ட அக்கறையில் அவர் அதை முன்னெடுத்திருப்பதாகவும், காங்கிரஸ் கட்சி இதில் அக்கறை காட்டவில்லை என்றும் ஜிகேபிடி அமைப்பு தெரிவிக்கிறது. அதேசமயம், அந்த மசோதாவை பாஜக அரசு எப்படிக் கையாளும் என்பது உற்றுநோக்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி, அடுத்ததாக ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்குவதாக ஐஎம்டிபி இணையதளம் தெரிவிக்கிறது. அவரும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அது அநேகமாக 1984-ல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் என அதன் போஸ்டர் உணர்த்துகிறது. ஆக, அடுத்து இன்னொரு பிரளயம் காத்திருக்கிறது!

x