பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம்: மனிதத் தவறு காரணமா?


மார்ச் 9-ல், ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் இருந்து இந்தியாவின் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று தவறுதலாக ஏவப்பட்டு பாகிஸ்தானின் மியான் சன்னு நகரில் விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மியான் சன்னு நகரில் பொதுமக்களின் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதுகுறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் முடிவுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்தது.

மார்ச் 11-ல் இதுகுறித்து விளக்கமளித்த இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம், அந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானில் விழுந்ததாகத் தெரிவித்தது. இந்தச் சம்பவம் ஆழ்ந்த வருத்தத்துக்குரியது என்றும், வழக்கமான பராமரிப்புப் பணியின்போது நிகழ்ந்த தொழில்நுட்பக் கோளாறுதான் அதற்குக் காரணம் என்றும் கூறிய பாதுகாப்புத் துறை, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதன்படி, உயர்மட்ட விசாரணை நடந்துவருகிறது.

இந்நிலையில், மனிதத் தவறுகள்தான் இந்தச் சம்பவம் நடக்க காரணம் என இந்த விசாரணையில் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. எனினும், அதிகாரபூர்வமாக இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x