காஷ்மீர் குறித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்து: இந்தியா கண்டனம்


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி

பாகிஸ்தான் சென்றிருக்கும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் குறித்த விஷயங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அது குறித்து சீனா உள்ளிட்ட பிற நாடுகள் தலையிட்டு கருத்து தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை என்றும் இந்தியா உறுதியாகத் தெரிவித்திருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனா அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் பாகிஸ்தானுக்கு ஆதரவானவையாக இருக்கின்றன. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, 2021 ஜூலையில் சீனா தெரிவித்திருந்தது. ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்றும் சீனா கருத்து தெரிவித்தது. கடந்த மாதம் காஷ்மீர் குறித்து வெளியான சீனா - பாகிஸ்தான் கூட்டறிக்கையும் இந்தியாவின் கண்டனத்தைச் சம்பாதித்தது. பிப்ரவரி 6-ல், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த அறிக்கை வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வாங் யி, “இஸ்லாமிய நண்பர்கள் பலர், காஷ்மீர் குறித்து பேசியதைக் கேட்க முடிந்தது. சீனா அவர்களின் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்கிறது” என்று கூறினார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பிற நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து பொதுக் கருத்தைத் தெரிவிப்பதை இந்தியா தவிர்த்துவருகிறது என்பதை அந்நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுபோன்ற கருத்துகளை எப்போதும் இந்தியா நிராகரித்துவருகிறது என்றும், இந்தியாவின் இந்த நிலைப்பாடு சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நன்றாகவே தெரியும் என்றும் ஆனந்த் பக்சி தெரிவித்திருக்கிறார்.


இன்று மாலை இந்தியாவுக்கு வாங் யி வருகை தரவிருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அவர் இப்படிப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்திய வருகையின்போது உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x