மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்குங்கள்!


கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. நாடாளுமன்றத்தில் இன்று பூஜ்ஜிய நேரத்தில் உரையாற்றும்போது, இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மதிய உணவு கிடைக்காமல் தவித்த குழந்தைகளின் கண்ணீர்க் கதைகள் மனதைக் கனக்கச் செய்தவை. அந்தக் காலகட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தனிநபர்கள் முன்னெடுத்த முயற்சிகளால் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு விநியோகம் நடந்தது. எனினும், அரசு நடைமுறைப்படுத்தும் அளவுக்கு விரிவானதாக அதை முன்னெடுக்க முடியவில்லை என்பதால், பசியில் வாடிய குழந்தைகள் ஏராளம். நிறுவனங்கள் மூடப்பட்டதால் சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகள் மிகவும் துயருற்றனர்.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு முழுவீச்சில் இயங்கிவரும் நிலையில், மீண்டும் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு, சூடாகச் சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கும் பணிகளைத் தொடங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம் என்று கூறிய அவர், பெருந்தொற்றுக் காலத்தில் முதலில் மூடப்பட்டதும், கட்டுப்பாட்டுத் தளர்வுகளுக்குப் பின்னர் கடைசியாகத் திறக்கப்பட்டதும் பள்ளிகள்தான் என்று குறிப்பிட்டார்.

மேலும், “பள்ளிகள் மூடப்பட்டபோது மதிய உணவுத் திட்டமும் தடைபட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் பெரியவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சத்துணவுகளுக்கு உலர் உணவுகள் ஒரு மாற்றாக இருக்க முடியாது” என்றும் சுட்டிக்காட்டினார்.

“தற்போது குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பிவிட்ட நிலையில், அவர்களுக்குச் சிறந்த சத்துணவுகள் வழங்கப்பட வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறிய குழந்தைகளைத் தற்போது மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர மதிய உணவுத் திட்டம் உதவும்” என்று கூறிய சோனியா இதுதொடர்பான இன்னொரு முக்கியப் பிரச்சினையையும் அரசுக்குச் சுட்டிக்காட்டினார்.

தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 2019-21 அறிக்கையின்படி, 2015-16-ம் ஆண்டில் இருந்ததைவிட ஊட்டச்சத்துக் குறைவாலும், எடை குறைவாலும் பாதிக்கப்படும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், கவலையளிக்கும் இந்தப் பிரச்சினையைத் தடுக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

x