இந்தியாவில் 12 – 17 வயதினருக்கான தடுப்பூசி: அவசரகால அனுமதி வாங்கிய நோவாவாக்ஸ்


இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அவசரகால அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தங்களுக்கு வழங்கியிருப்பதாக நோவாவாக்ஸ் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது.

அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ், இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் கோவாவாக்ஸ் எனும் பெயரில் அந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

12 முதல் 17 வயது வரையிலான 2,247 பேருக்கு, சோதனை முறையில் தடுப்பூசி செலுத்தி அதில் 80 சதவீதம் வெற்றி கண்டிருப்பதாக கடந்த மாதம் நோவாவாக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் ஏற்கெனவே கோர்பேவாக்ஸ், ஸைகோவி-டி, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் 12 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குச் செலுத்த அனுமதி பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் இதுவரை 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவந்தன. இந்நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த வாரம் தொடங்கின.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நோவாவாக்ஸ் தடுப்பூசிகளைச் செலுத்த கடந்த டிசம்பர் மாதம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

x