பத்திரிகையாளர் டேனிஷ் படுகொலை: தாலிபானுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு!


கடந்த ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய காலட்டத்தில் அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டிருந்த புகைப்படப் பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், தாலிபான்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். தற்போது அவரது படுகொலைக்கு நீதி கேட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது அவரது குடும்பம்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் புகைப்படப் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த டேனிஷ், டெல்லியைச் சேர்ந்தவர். மிகச் சிறந்த புகைப்படங்களுக்காகப் பெயர் பெற்றவர். புலிட்சர் விருது பெற்றவர். 2020-ல் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரம், கரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்கள் தகனம் என்பன உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தனது கேமராவின் மூலம் பதிவுசெய்து உலகை அதிரவைத்தவர்.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தைத் தாலிபான்கள் கைப்பற்றியிருந்த நிலையில், அதை மீட்கும் முயற்சியில் ஆப்கன் சிறப்புப் படையினர் அங்கு சென்றிருந்தனர். அவர்களுடன் டேனிஷும் சென்றிருந்தார்.

அப்போது தாலிபான்களின் தாக்குதலில் டேனிஷ் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் தாலிபான்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகப் பின்னர் தெரியவந்தது.

அவர் இறந்த பின்னர் அவரது உடல் தாலிபான்களால் சிதைக்கப்பட்டதாக, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட உளவுத் தகவல்கள், புகைப்படங்கள், பிரதேப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தெரியவந்தது.

எனினும், அந்தத் தகவல்களை தாலிபான்கள் மறுத்தனர். அதேவேளையில், தாலிபான்கள் அவரைக் கடத்தி கொலை செய்தனரா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தாலிபானின் 6 முக்கியத் தலைவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத தளபதிகள் சிலர் மீது டேனிஷின் குடும்பத்தினர் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.

“அவர் கொல்லப்பட்ட சம்பவம் வெறுமனே ஒரு கொலை மட்டுமல்ல, மனிதகுலத்துக்கு எதிரான குற்றம், போர்க்குற்றம்” என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

x